/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
3 நாட்கள் அரிசி சோறு சமைக்காத பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
/
3 நாட்கள் அரிசி சோறு சமைக்காத பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
3 நாட்கள் அரிசி சோறு சமைக்காத பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
3 நாட்கள் அரிசி சோறு சமைக்காத பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு
ADDED : அக் 25, 2025 02:01 AM
ராசிபுரம், ராசிபுரம் அருகே, கோவில் விழாவிற்காக, மூன்று நாட்கள் அரிசி சோறு சமைக்காத பக்தர்கள் பொங்கல் வைத்து தங்களது விரதத்தை முடித்தனர்.
ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டி புதுார் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஆயா கோவில் என்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் தீபாவளி முடிந்து அடுத்த வெள்ளிக்கிழமை கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
கோவில் திருவிழா தொடங்கிய உடன் கூனவேலம்பட்டி புதுார், குருக்குபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட, 18 கிராம மக்கள் தங்களது வீடுகளில் அரிசி சாதம் சமைக்காமல், குழம்பு செய்வதற்கு எண்ணெயில் தாழிக்க மாட்டார்கள். அதற்கு மாறாக சோளம், கம்பு, தினை உள்ளிட்ட மாற்று உணவுகளை உண்டு விரதம் இருப்பர். வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தபின், சுற்றி உள்ள கிராம மக்கள் விரதத்தை முடிக்கும் விதமாக பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இந்தாண்டு திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள், பொதுமக்கள் கோவிலில் கூட ஆரம்பித்தனர். நேற்று அதிகாலை, அம்மனுக்கு பொங்கல் வைத்து தங்களது விரதத்தை முடித்தனர்.
தொடர்ந்து, வாழைப்பழம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வரும் வாழைப்பழங்களை கொண்டு வாழைப்பழம் ஊஞ்சல் உற்சவத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குழந்தை வரம், கடன் பிரச்னை, தொழில் செழிக்க, நோய் நொடியின்றி வாழ பல்வேறு பிரார்த்தனைகள் நிறைவேறும்போது பக்தர்கள் ஊஞ்சல் உற்சவம் நடத்துவதாக பூசாரிகள் தெரிவித்தனர். கடந்த, 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த விழாவில் சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.

