/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அ.தி.மு.க., நகர செயலாளர் சிறையில் அடைப்பு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீசார் ஏமாற்றம்
/
அ.தி.மு.க., நகர செயலாளர் சிறையில் அடைப்பு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீசார் ஏமாற்றம்
அ.தி.மு.க., நகர செயலாளர் சிறையில் அடைப்பு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீசார் ஏமாற்றம்
அ.தி.மு.க., நகர செயலாளர் சிறையில் அடைப்பு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்ட போலீசார் ஏமாற்றம்
ADDED : ஜூன் 21, 2025 01:29 AM
ராசிபுரம், ராசிபுரம் நகராட்சி முன்னாள் தலைவர், அ.தி.மு.க., பாலசுப்பிரமணியம் கைதை கண்டித்து, கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், யாரும் கண்டுகொள்ளாததால், போலீசார் ஏமாற்றமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பாலசுப்பிரமணியம், 50; அ.தி.மு.க., நகர செயலாளராக உள்ளார். கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில், ராசிபுரம் நகராட்சி தலைவராக பதவி வகித்தார். கடந்த, 2013ல் இவரும், தற்போது, அ.ம.மு.க., மாவட்ட செயலாளராக உள்ள பழனிவேலும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்துள்ளனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், வீராணத்தை சேர்ந்த பத்மாவதி, 63, என்பவர், 'ஆன்லைன்' மூலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி.,க்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.
அதில், 'ராசிபுரத்தை சேர்ந்த பழனிவேல், பாலசுப்பிரமணியம் ஆகிய இருவரும், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, ஏ.கே.சமுத்திரம் என்ற இடத்தில், 'ராயல் ஹைடெக் சிட்டி' என்ற பெயரில் வீட்டுமனை பிரித்திருந்தனர். இதில், வீட்டுமனை ஒதுக்கி தருவதாக கூறி, மாதந்தோறும் தவணை முறையில் பணம் வசூலித்து வந்தனர். ஆனால், தவணை முடிந்த பின் வீட்டுமனையும் பிரித்து தரவில்லை. வசூலித்த பணத்தையும் தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தனர்' என, தெரிவித்திருந்தார். இவர் மட்டுமின்றி, மேலும், ஆறு பேர் புகாரளித்திருந்தனர்.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட குற்றவியல் போலீசார், நேற்று முன்தினம் மாலை, பாலசுப்பிரமணியத்தை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். பின், அன்றிரவு அவரை கைது செய்த போலீசார், நேற்று காலை ராசிபுரம் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவான பழனிவேலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியத்தை விசாரணைக்கு அழைத்து சென்றபோதே, ராசிபுரம் மண்டலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, தலா, இரண்டு போலீசார் ராசிபுரம் பகுதியில் பாதுகாப்பு பணிக்கு, நேற்று முன்தினம் இரவே வரவழைக்கப்பட்டனர். நேற்று குற்றவியல் நீதிமன்ற நடுவர் வீட்டில், பாலசுப்ரமணியத்தை ஆஜர்படுத்தும்போது, அவரது ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என கருதி, ராசிபுரம் பஸ் ஸ்டாண்டில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், நிர்வாகிகள் ஒருவர் கூட வராததால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு
நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் வெளியிட்ட அறிக்கை: ராசிபுரம் அருகே, ஏ.கே.சமுத்திரம் பகுதியில், 'ராயல் ஹை-டெக் சிட்டி' என்ற பெயரில் வீட்டுமனை விற்பனை செய்யப்படுவதாக விளம்பரம் செய்து, பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகாரில், நாமக்கல் மாவட்ட, அ.ம.மு.க., செயலாளர் பழனிவேல், அ.தி.மு.க., நகர செயலாளரும், ராசிபுரம் நகராட்சி முன்னாள் சேர்மனுமான பாலசுப்ரமணியம் ஆகிய இருவர் மீதும், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசுப்ரமணியத்தை கைது செய்துள்ளனர்.
வீட்டுமனை மோசடி புகார் தொடர்பாக இதுவரை, ஏழு புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுபோன்று பொதுமக்கள் யாரேனும் இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி, தற்போதுவரை வீட்டுமனை வழங்காமல் ஏமாற்றப்பட்டிருந்தால், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தக்க ஆதாரங்களுடன் புகாரளிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.