/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
5 இடங்களில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
/
5 இடங்களில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : மே 15, 2025 01:55 AM
நாமக்கல் :'பருவமழை காலங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஒத்திகை நிகழ்ச்சி, மாவட்டத்தில் இன்று, 5 இடங்களில் நடக்கிறது. பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பருவமழை காலங்களில், பலத்த மழை காரணமாக, ஆற்றில் அதிக நீர்வரத்து இருக்கும்போது, பொதுமக்களின் உயிர், உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு நடவடிக்கை போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டத்தில் இன்று மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை, ஐந்து இடங்களில் துணை கலெக்டர்கள் தலைமையில், மாவட்ட நிர்வாகம் மூலம், அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் மேலாண் ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது.
குமாரபாளையம் தாலுகா, பவானி பழைய பாலம், பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு, ஜனதா நகர், திருச்செங்கேடு தாலுகா, பட்லுார், ப.வேலுார் தாலுகா, கொத்தமங்கலம், மோகனுார் தாலுகா, ஒருவந்துார் ஆகிய இடங்களில், இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை, உள்ளாட்சி, காவல், நீர்வளம், தீயணைப்பு -மீட்பு பணிகள், சுகாதாரம், நெடுஞ்சாலை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் போக்குவரத்து துறை மற்றும் அந்தந்த கிராமத்திற்கான முதல்நிலை தகவல் அளிப்பவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி, பேரிடர் காலங்களுக்கான முழுமையான ஒத்திகை பயிற்சியாக மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்கள் எவ்வித பதற்றமோ அல்லது அச்சமோ கொள்ள தேவையில்லை.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.