/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விவசாயிகளுக்கு மூலிகைச்செடி வினியோகம்
/
விவசாயிகளுக்கு மூலிகைச்செடி வினியோகம்
ADDED : ஜன 28, 2025 07:00 AM
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், அனைத்து கிராம விவசாயிகளுக்கும் ஆடாதொடை, நொச்சி மூலிகை செடிகள் கட்டணமின்றி வினியோகம் செய்யப்படுகிறது. பயிர்களை பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இயற்கை பூச்சி விரட்டிகளை தயாரித்து பயிர்களை பராமரிக்கவும் இம்மூலிகை செடிகள் கட்டணமின்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இம்மூலிகை செடிகளை விவசாயிகள தங்கள் வயல் வரப்புகளில் வளர்த்து, இதன் இலைகளை பறித்து இயற்கைப்பூச்சி விரட்டிகளை தயாரித்து, பயிர்கள் மீது தெளிப்பதால் பயிர்களை தாக்கும் பூச்சி, நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு மகசூல் அதிகரிக்கும். மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. இதனால் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் செலவு குறையும். ஆடாதொடையின் இலைகள், வேர்கள் மற்றும் தண்டுகள் மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தவை. சளி, இருமல், ஆஸ்துமா, வயிற்று பூச்சிகள் போன்றவற்றை நீக்கும். இச்செடி பல்வேறு வகையான கால நிலைக்கும், மண்ணிற்கும் ஏற்றது.
ஆடாதொடை, நொச்சி மூலிகை செடிகள் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் தயார் நிலையில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா நகல் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

