/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அனுமதியின்றி மரங்கள் அகற்றம்: கல்வித்துறை விசாரணை
/
அனுமதியின்றி மரங்கள் அகற்றம்: கல்வித்துறை விசாரணை
ADDED : டிச 08, 2024 01:22 AM
அனுமதியின்றி மரங்கள் அகற்றம்:
கல்வித்துறை விசாரணை
மோகனுார், டிச. 8-
மோகனுார் தாலுகா, ஒருவந்துார் பஞ்., ஒருவந்துார் புதுாரில், பஞ்., தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 28 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த சத்தியமூர்த்தி, கடந்த ஆக.,ல், விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார். தற்போது, இடைநிலை ஆசிரியர் கலைச்செல்வி பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பள்ளி வளாகத்தில் வானுயர வளர்ந்து பசுமையாக காணப்பட்ட, 20க்கும் மேற்பட்ட மரங்கள் அறுத்து அகற்றப்பட்டுள்ளன.
இது, பெற்றோர், இயற்கை ஆர்வலர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவ்வாறு மரங்களை அகற்றுவதற்கு பி.டி.ஓ., வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட யாரிடமும் அனுமதி பெறவில்லை. தகவல் அறிந்த வட்டார கல்வி அலுவலர் இளங்கோ, பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளார்.
இதுகுறித்து, மோகனுார் பி.டி.ஓ., பாலமுருகன் கூறுகையில், ''பள்ளியில் மரம் வெட்டுவதற்கு யாரும் அனுமதி பெறவில்லை. இது தொடர்பாக, நாளை (டிச., 9), பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்துகிறேன்,'' என்றார்.