ADDED : ஏப் 13, 2026 02:56 AM
நாமக்கல்:மீன்பிடி தடைகாலம் துவங்குவதாலும், உற்பத்தி, 15 சதவீதம் சரிந்துள்ளதாலும், முட்டை கொள்முதல் விலை, 'கிடுகிடு'வென உயர்ந்து வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில், தினசரி, ஐந்து கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, தினசரி முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதன்படி, கடந்த, 1ல், கொள்முதல் விலை, 405 காசாக இருந்தது. 8ல், 415, 9ல், 420, 10ல், 430 என, உயர்ந்த நிலையில், நேற்று முன்தினம், 25 காசு அதிகரித்து, 455 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று மாலை, நாமக்கல் மண்டல 'நெக்' தலைவர் சிங்க ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், முட்டை விலை மேலும், 25 காசு உயர்த்தி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 480 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 5 நாட்களில், கொள்முதல் விலை, 75 காசு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டு தோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், ஆழ்கடலில் மீன்பிடிக்க, வரும், 15 முதல் ஜூன், 14 வரை, 61 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில், வெயிலின் தாக்கம் காரணமாக, உற்பத்தி, 10ல் இருந்து, 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.குறிப்பாக, ஒரு முட்டை உற்பத்தி செலவு, 520 காசு என்ற நிலையில், அதற்கு மேல் விற்பனை செய்தால் மட்டுமே கோழிப்பண்ணை தொழில் சிறப்பாக இருக்கும். தற்போதைய சூழ்நிலையில், முட்டை கொள்முதல் விலை, 550 காசு வரை உயர வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
