/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வீட்டு இணைப்புக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர், கேங்மேன் கைது
/
வீட்டு இணைப்புக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர், கேங்மேன் கைது
வீட்டு இணைப்புக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர், கேங்மேன் கைது
வீட்டு இணைப்புக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர், கேங்மேன் கைது
ADDED : செப் 21, 2025 01:40 AM
நாமக்கல் :வீட்டு இணைப்புக்கு, 5,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர், கேங்மேன் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, மொளசியை சேர்ந்தவர் நவநீதம்,36; எலக்ட்ரீஷியன். இவரது தாயார் ஜானகிக்கு சொந்தமான, 81 சென்ட் நிலத்தில் வீடு கட்டி உள்ளார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, கடந்த ஜூன், 6ல், ஆன்லைன் மூலம், 13,300 ரூபாய் செலுத்தி உள்ளார். ஆனால், இணைப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, எர்ணாபுரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இது குறித்து கேட்டுள்ளார்.
அங்கு, குருக்கபுரம் எல்லப்பாளையத்தை சேர்ந்த லைன் இன்ஸ்பெக்டர் மாது,57, தளிகையை சேர்ந்த கேங்மேன் விவேகானந்தன், 41, ஆகியோர், '5,500 ரூபாய் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்' என, நவநீதத்திடம் தெரிவித்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத நவநீதம், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனைபடி நேற்று மதியம், 12:30 மணிக்கு வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்துார் சாலையில், பவுடர் தடவிய பணத்தை நவநீதம், கேங்மேன் விவேகானந்தனிடம் கொடுத்தார்.
அப்போது, மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., (பொறுப்பு) ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர், கையும் களவுமாக விவேகானந்தனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, லைன் இன்ஸ்பெக்டர் மாதுவையும் போலீசார் கைது செய்தனர்.லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன் இன்ஸ்பெக்டர், கேங்மேன் இருவரும் கைதானது, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.