சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் திடக்கழிவை 4 ஆக பிரித்து வழங்க இ.ஓ., அறிவுறுத்தல்
சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல் திடக்கழிவை 4 ஆக பிரித்து வழங்க இ.ஓ., அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 04, 2026 04:44 AM
சேந்தமங்கலம்:'சேந்தமங்கலம்
டவுன் பஞ்., பகுதியில் உள்ள பொதுமக்கள், குப்பையை நான்கு வகைகளாக
தரம் பிரித்து வழங்க வேண்டும்' என, டவுன் பஞ்., செயல் அலுவலர் ராஜசேகரன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாடு
முழுவதும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அதன்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், இவ்விதிகள்
நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்புதிய விதிகள்படி,
சேந்தமங்கலம் பேரூராட்சி பொதுமக்கள் திடக்கழிவுகளை பின்வரும்,
நான்கு பிரிவுகளாக தரம் பிரித்து, வீட்டிற்கு வருகை தந்து
திடக்கழிவுகளை சேகரிக்க செய்யும் துாய்மை பணியாளர்களிடம் வழங்க
வேண்டும்.
அதன்படி, காய்கறி தோல்கள், பழத்தோல்கள், உணவு கழிவுகள்,
இலைகள், பூக்கள், முட்டை ஓடு போன்ற மட்கும் கழிவுகளை பச்சை வண்ண கூடையில்
சேர்க்க வேண்டும். புத்தகங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி
பாட்டில்கள், உலோக டின்கள், கார்ட் போர்டு அட்டைகள் போன்ற மறுசுழற்சி
செய்யக்கூடிய கழிவுகளை, நீல வண்ண கூடையில் சேகரிக்க வேண்டும்.
சிப்ஸ் கவர், அழுக்கு படிந்த பிளாஸ்டிக் பொருட்கள், நாப்கின், டயபர் போன்ற
மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை சிவப்பு வண்ண கூடையில் சேர்க்க
வேண்டும்.
பேட்டரி, காலாவதியான மருந்துகள், ரசாயன பொருட்கள்,
பெயின்ட் பூச்சிகள், சி.எப்.எல்., பல்புகள் போன்ற சிறப்பு கவனிப்பு
பொருட்களை கருப்பு வண்ண கூடையில் சேர்க்க வேண்டும். இந்த நடைமுறைகளை
செயல்படுத்த சேந்தமங்கலம் பேரூராட்சி பொதுமக்கள் அனைவரும் போதிய
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
