/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குறைந்த செலவில் நீர் அளவீடுவிவசாயிகள் சங்கம் கோரிக்கை
/
குறைந்த செலவில் நீர் அளவீடுவிவசாயிகள் சங்கம் கோரிக்கை
குறைந்த செலவில் நீர் அளவீடுவிவசாயிகள் சங்கம் கோரிக்கை
குறைந்த செலவில் நீர் அளவீடுவிவசாயிகள் சங்கம் கோரிக்கை
ADDED : மே 04, 2025 01:09 AM
நாமக்கல்:'குறைந்த கட்டணத்தில் ஆழ்துளை குழாய் அமைக்க, நிலத்தடி நீர்மட்டம் கண்டறியும் கருவி வழங்க, போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
விவசாய பயன்பாட்டிற்காகவும், மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் அரசு, தனியார் துறை மூலம் ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் எங்கு அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து, அங்கு ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்படுகிறது.
அதற்காக, துள்ளியமாக கண்டறியும் நபர்களும் கிராம பகுதிகளில் உள்ளனர். அவர்கள் மூலம், நீர்மட்டம் கண்டறிந்து, அப்பகுதியில் கிணறும், ஆழ்துளை குழாய் கிணறும் அமைத்து வருகின்றனர்.
தற்போது, கோடைகாலம் துவங்கி உள்ளதால், தனியார் நிறுவனம் மூலம் பூமிக்கு அடியில் நீர் எவ்வளவு உள்ளது என்பதை அளவீடு செய்து, ஆழ்துளை குழாய் கிணறு அமைத்து வருகின்றனர். அதற்காக, 15,000 முதல், 20,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்துகின்றனர். இது, விவசாயிகளுக்கு பெரும் சுமையாக உள்ளது. அதனால், வேளாண் பொறியியல் துறை மூலம், குறைந்த கட்டணத்தில் நீர் இருப்பை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: தற்போது கோடைகாலம் என்பதால், விவசாயிகள் ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பதற்கு பூமிக்கு அடியில் நீர் எவ்வளவு உள்ளது என்பதை ஆய்வு செய்ய, பொறியாளர்களை அணுகுகின்றனர்.
தனியார் நிறுவனத்தினர் நீர் அளவீடு செய்ய, 15,000 முதல், 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இது விவசாயிகளுக்கு கூடுதல் செலவாக அமைகிறது. அந்தந்த மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் நிலத்தடி நீர் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியும் கருவியை பயன்படுத்தி, குறைந்த கட்டணத்தில் தேவைப்படும் விவசாயிகளுக்கு அளவீடு செய்து கொடுக்கலாம்.
அதன் மூலம் விவசாயிகளை கூடுதல் செலவில் இருந்து பாதுகாக்கலாம். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

