ADDED : ஜன 17, 2025 06:14 AM
நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த, பெண் கொலை வழக்கில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி தாலுகா, கூடகோவிலுாரை சேர்ந்தவர் பூமாரி, 30. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, உறவினரான மகாலிங்கம், 49, என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில், மகாலிங்கத்திற்கு தர்மபுரி மாவட்டம், வகுரப்பம்பட்டி அருகே பள்ளிப்பட்டியை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் மாரியப்பன் பழக்கமானார். அவரிடம் கடந்த எட்டு மாதங்களாக மகாலிங்கம், பூமாரி ஆகிய இருவரும் கட்டட வேலை செய்து வந்தனர்.
நாமக்கல் பூங்கா நகரில், வாடகை வீடு ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தபோது, பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல மாரியப்பன், அவரது மகன் சேட்டு ஆகியோரிடம், கூலி தொகை பாக்கி, 45 ஆயிரம் ரூபாயை தரும்படி மகாலிங்கம், பூமாரி ஆகியோர் கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சமையல் செய்து கொண்டு இருந்த பூமாரி மீது, கேனில் இருந்த பெட்ரோலை ஊற்றி, சேட்டு பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. இதில் தீயில் கருகிய பூமாரி இறந்தார்.
நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கு காரணமான சேட்டு, 22, அவரது தந்தை மாரியப்பன், 45, ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின், இருவரையும் நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.