ADDED : ஏப் 28, 2024 03:45 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலையில், 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. நேற்று சனிக்கிழமை என்பதால் கொல்லிமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், டூவீலர், கார்களில் சென்று வந்தனர். அவர்களை, காரவள்ளி சோதனை சாவடியில் பெயரளவிற்கு சோதனை செய்து அனுப்பினர்.
இதனால், நேற்று மாலை, 62வது கொண்டை ஊசி வளைவில் மீண்டும் தீ பிடித்தது. இந்த தீ காய்ந்திருந்த செடி, மரங்களுக்கு பரவி புகை மூட்டமாக காணப்பட்டது.
தகவலறிந்து சென்ற கொல்லிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால், மலைப்பாதையில் சென்ற வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
போதமலையில்...
வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போதமலையில் கோடை காலத்தில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் குட்டலாடம்பட்டி அருகே போதமலையில், நேற்று இரவு காட்டுத்தீ பரவியது.
இரவில் எரிந்த தீ, நெருப்பு குழம்பு வழிந்தோடுவது போல காட்சியளித்தது. வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வந்தனர்.

