/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரும்புக்கு இலைவழி நுண்ணுாட்டம்; தெளிக்க வேளாண் துறை ஆலோசனை
/
கரும்புக்கு இலைவழி நுண்ணுாட்டம்; தெளிக்க வேளாண் துறை ஆலோசனை
கரும்புக்கு இலைவழி நுண்ணுாட்டம்; தெளிக்க வேளாண் துறை ஆலோசனை
கரும்புக்கு இலைவழி நுண்ணுாட்டம்; தெளிக்க வேளாண் துறை ஆலோசனை
ADDED : மே 28, 2024 07:10 AM
ப.வேலுார் : கபிலர்மலை வட்டார விவசாயிகள், கரும்புக்கு இலைவழி நுண்ணுாட்டம் தெளிக்க, வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கபிலர்மலை வட்டாரத்தில், கரும்பு சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிரில், இரும்புச்சத்து பற்றாக்குறை வட்டாரத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும், நடவு கரும்பைவிட மறுதாம்பு கரும்பிலேயே இந்த சத்து பற்றாக்குறை, இளம் பயிரில் அதிகமாக தென்படும். இதனை சரிசெய்யவில்லையெனில், கரும்பில் மகசூல் இழப்பு ஏற்படும்.
இதன் அறிகுறியாக, இலையின் இளம் தோகைகளில் இளம்பச்சை அல்லது வெண்ணிற கோடுகள் முதலில் நரம்புகளுக்கிடையே ஆரம்பிக்கும். தோகையின் முழு நீளத்துக்கும் இக்கோடுகள் காணப்படும். இலைகள் வெளுத்தும் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும். இலை நரம்புகள் தெளிவாக வெளிர் பச்சை நிறத்துடன் காணப்படும். கரும்பின் தண்டு மற்றும் வேர் வளர்ச்சி குன்றிவிடும். இதனை தாழை பூத்தல் என்றும் அழைப்பர்.
இந்த அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்த உடன், ஏக்கருக்கு, 4 கிலோ இரும்பு சல்பேட், 2 கிலோ ஜிங்க் சல்பேட் இரண்டையும், 10 லிட்டர் நீரில் முதல் நாள் இரவில் நன்கு கரைத்து ஊறவைத்து மறுநாள் காலையில், 2 எலுமிச்சம் பழத்தை பிழிந்து, மீண்டும் நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும். இத்துடன் ஒரு கிலோ யூரியாவை சேர்த்து கலக்கி, 14 டேங்க் வரும்படி நீர் ஊற்றி கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழியாக கரும்பு பயிரின் அனைத்து பாகங்களும் நன்கு நனையும்படி காலை, மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.
தேவைப்பட்டால், 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிக்கவேண்டும். இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ள நிலங்களில் ஏக்கருக்கு, 40 கிலோ இரும்பு சல்பேட் உரத்தை, 5 டன் தொழு உரத்தோடு கலந்து அடியுரமாக இடவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.