ADDED : நவ 07, 2024 05:55 AM
'காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, பள்ளிக்கு செல்லாமல் வேறு நபரை தனக்கு பதிலாக நியமித்து, மாணவர்களுக்கு பாடம் நடத்திய, அரசு நடுநிலைப்பள்ளி உதவி ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், மல்லிகுட்டை பஞ்., ராமியம்பட்டியில், அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. கடந்த, ஆக., 2 ல் நடந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில், பள்ளி வளர்ச்சி மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் குறித்து, கருத்து கேட்கப்பட்டது.
அப்போது, அப்பள்ளி உதவி ஆசிரியர் பாலாஜி, பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்பதும், வேறு ஒருவரை அவரே நியமித்து பாடம் நடத்தி வந்ததும், சக பெண் ஆசிரியர்களிடம் தவறான முறையில், அவர் நடப்பதாகவும் புகார் கூறப்பட்டது. மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புகார் படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சின்னமாது, நேற்று முன்தினம், 5ம் தேதி உதவி ஆசிரியர் பாலாஜியை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.