/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'பள்ளியிலேயே 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளித்தால் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்பெறுவர்'
/
'பள்ளியிலேயே 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளித்தால் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்பெறுவர்'
'பள்ளியிலேயே 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளித்தால் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்பெறுவர்'
'பள்ளியிலேயே 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளித்தால் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்பெறுவர்'
ADDED : ஜூலை 08, 2025 01:26 AM
நாமக்கல், 'அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் மெடிக்கல் துறைக்கு வரவேண்டும் என்றால், அரசு பள்ளியிலேயே, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும்' என, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியில், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் பயிலும் மாணவ, மாணவியர் கூறியதாவது:
முகேஷ்சரண், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்: சேலம் மாவட்டம், மேச்சேரியில் வசித்து வருகிறேன். என் பெற்றோர் இருவரும் டெய்லர். நான் பி.எஸ்சி., பிசிக்ஸ் முடித்துவிட்டு, இறுதியாண்டு படிக்கும்போது, 2021ல், 'நீட்' தேர்வு எழுதி, 291 மதிப்பெண் பெற்றேன். நாமக்கல் மெடிக்கல் கல்லுாரியில் இடம் கிடைத்தது.
இந்த கல்லுாரியில் சேர்ந்தபின், அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்றுக்கொண்டது. கூடுதல் கட்டணம் எதுவும் இதுவரை கேட்டதில்லை. அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், அரசே பயிற்சியளித்தால், மருத்துவ கல்லுாரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆஜித் சல்மான், எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு மாணவர்: புதுக்கோட்டை மாவட்டம், கிளாங்காடு கிராமத்தில் வசிக்கிறேன். நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 535 மதிப்பெண் பெற்றேன். 'நீட்' தேர்வு எழுதி, 300 மதிப்பெண் பெற்று, 2022ல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தேன். 7.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.
அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவ துறைக்கு வரவேண்டும் என்றால், அரசு பள்ளியிலேயே, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும். கேரளாவில் தனியார் பயிற்சி மையத்தில், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்றேன்.
சண்முகபிரியா, எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு மாணவி: சேலம் மாவட்டம், இளம்பிள்ளையில் வசித்து வருகிறேன். என் தந்தை கிருஷ்ணராஜ், தறித்
தொழிலாளி. அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில், 573 மதிப்பெண் பெற்றேன்.
'நீட்' தேர்வில், 295 மதிப்பெண் பெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தேன். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, 'நீட்' தேர்வு குறித்த தெளிவு இருந்தது. அதற்கான பயிற்சி எங்கள் அரசு பள்ளியில் கிடைக்கவில்லை. தனியார் பயிற்சி மையத்தில் தான் படித்தேன். அரசு பள்ளியில், 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளித்தால், மேலும், பல மாணவர்கள் டாக்டராகும் கனவு நிறைவேறும்.
ரெங்கநாயகி, எம்.பி.பி.எஸ்., மூன்றாமாண்டு மாணவி: சேலம், ஜலகண்டாபுரத்தில் வசிக்கிறேன். என் தந்தை ரங்கதுரை, நெசவு தொழிலாளி. தாயார் கிருஷ்ணபிரியா வீட்டை கவனித்து வருகிறார். 2022ல் பிளஸ் 2 தேர்வில், 575 மதிப்பெண் பெற்றிருந்தேன். 'நீட்' தேர்வில், 300 மதிப்பெண் பெற்று, அரசின், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், நாமக்கல் மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தது. பள்ளியிலேயே, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளித்தனர். அதன் மூலம் வெற்றி பெற்றேன். என்னை போன்ற மாணவ, மாணவியர், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் அதிக அளவில் மருத்துவ கல்லுாரியில் சேர்வதற்கு, அரசு பள்ளியிலேயே, 'நீட்' தேர்வுக்கான பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.