/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து தாய், தாத்தாவை கொலை செய்த பேரன் கைது
/
சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து தாய், தாத்தாவை கொலை செய்த பேரன் கைது
சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து தாய், தாத்தாவை கொலை செய்த பேரன் கைது
சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து தாய், தாத்தாவை கொலை செய்த பேரன் கைது
ADDED : மே 03, 2024 09:18 PM
நாமக்கல்:சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கெடுத்து, தாய் மற்றும் தாத்தாவை சாப்பிட வைத்து கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 45; லாரி டிரைவர். இவரது மனைவி நதியா, 41. இவர்களுக்கு பகவதி, 21, கவுசிக் ஆதி, 19, என, இரண்டு மகன்கள் உள்ளனர். பகவதி, புதுச்சத்திரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், மூன்றாமாண்டு படித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, 'இ-சேவை' மையத்தில் பகுதி நேர பணிக்கு சேர்ந்துள்ளார். இன்னும் ஒரு மாத சம்பளம் கூட வாங்கவில்லை. கவுசிக் ஆதி, அரசு கலைக்கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
பகவதி, சிறுவயது முதலே எருமப்பட்டி, தேவராயபுரத்தில் உள்ள தாத்தா சண்முகநாதன், 67, வீட்டில் வளர்ந்துள்ளார். கடந்த, 30ல் நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலில், ஏழு சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கியுள்ளார். அதில், ஒரு பார்சலை, தன்னுடன் வேலை பார்த்த நண்பருக்கு கொடுத்தார். பின், அவரது வண்டியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, தனக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்பட்டதாக கூறி, தாய் நதியா, தம்பி கவுசிக் ஆதி ஆகிய இருவருக்கும், இரண்டு பார்சல் சிக்கன் ரைசை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, தாத்தா சண்முகநாதன் வீட்டிற்கு சென்றார். அங்கு, தாத்தா மற்றும் பாட்டி பார்வதி, சித்தி பிரேமா, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சண்முகநாதனை தவிர மற்ற அனைவரும் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு துாங்கிவிட்டனர். அதனால், ஒரு சிக்கன் ரைஸ் பார்சலை மட்டும் தாத்தா சண்முக நாதனிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், தாய் நதியா சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்து, வயிற்று வலியால் துடித்துள்ளார். இதை பார்த்த கவுசிக் ஆதி, சாப்பாட்டை முகர்ந்து பார்த்துள்ளார். அதில், விஷம் கலந்த துர்நாற்றம் வீசியுள்ளது. அந்த உணவில் சிறிது எடுத்து தங்கள் வீட்டில் வளர்த்து வரும் நாய்க்கு போட்டுள்ளார். உணவை சாப்பிட்ட நாய் வாந்தி எடுத்துள்ளது. உடனடியாக சித்தி பிரேமாவுக்கு போன் செய்து சாப்பாட்டை சாப்பிட வேண்டாம் என தடுத்துள்ளார். ஆனால், அதற்குள் சண்முகநாதன் சாப்பிட்டு முடித்துவிட்டார். அவரும் வாந்தி எடுத்தார்.
இதையடுத்து, தாய் நதியா, தாத்தா சண்முகநாதன் ஆகிய இருவரையும் மீட்டு, ஆபத்தான நிலையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிக்சைக்கு சேர்த்தனர். கலெக்டர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு செய்து, 'சீல்' வைத்தார். தீவிர சிகிச்சையில் இருந்த சண்முகநாதன், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அதேசமயம், உணவு பரிசோதனையில், சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், பகவதியை கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது, பகவதி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். மேற்கொண்டு விசாரித்ததில் உணவில் விஷம் கலந்த பகீர் தகவலை ஒப்புக்கொண்டார். மேலும், போதைப்பழக்கத்துக்கு அடிமையான பகவதி, சில பெண்களிடம் தகாத உறவில் இருந்துள்ளார். இதை கண்டித்த குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார். இதற்காக, சில தினங்களுக்கு முன் வாங்கி வைத்த பூச்சிக்கொல்லி மருந்தை, கடந்த, 30ல் சிக்கன் ரைசில் கலந்து கொடுத்து தெரியவந்தது.
இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தாய் நதியாவும் உயிரிழந்தார். இதுகுறித்து, பகவதியிடம், போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.