/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வி.ஏ.ஓ., வை தாக்கியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
/
வி.ஏ.ஓ., வை தாக்கியவர் மீது பாய்ந்தது குண்டாஸ்
ADDED : ஆக 28, 2025 01:29 AM
மல்லசமுத்திரம், நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே, மொஞ்சனூர் மேட்டுகாட்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகாமி, 32: இவர் தற்சமயம், பாலமேடு கிராமத்தில் வி.ஏ.ஓ., வாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 19ம் தேதி காலை பாலமேடு காட்டுபாளையம் பகுதியில் வசித்து வரும் தனபால், பட்டா நிலத்தில் மண் அள்ளுவதாக அப்பகுதியினர், வி.ஏ.ஓ., சிவகாமியிடம் புகார் தெரிவித்தனர். அப்பகுதிக்கு சென்ற வி.ஏ.ஓ., சிவகாமி, அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மண் அள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்து, மண் அள்ளுவதை தடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தனபால், மொஞ்சனூர் பறையக்காடு பகுதியில் வசித்து வரும் புரோக்கர் சீனிவாசன், 57. என்பவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அன்று இரவு 9:00 மணிக்கு, வி.ஏ.ஓ.,சிவகாமி வீட்டிற்கு சென்ற புரோக்கர் சீனிவாசன், மதுபோதையில், 'நாங்கள் அப்படிதான் மண் அள்ளுவோம். உன்னால் என்ன செய்ய முடியும்' என, ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தும், சிவகாமியின் முடியை பிடித்து கீழே தள்ளி நெஞ்சில் எட்டி உதைத்துள்ளார். இதில், சிவகாமிக்கு கையில் அடிபட்டதுடன் மயக்க நிலைக்கு சென்றார்.
அக்கம் பக்கத்தார் விரைந்து வந்து வி.ஏ.ஓ.,சிவகாமியை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தகராறில் ஈடுபட்ட சீனிவாசனை பொதுமக்கள் பிடித்து, எலச்சிபாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாவட்டம் முழுதும் உள்ள வருவாய் துறை அலுவலர்கள் சீனிவாசன் மீது குண்டா சட்டம் பதிய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி உத்தரவின் படி, வி.ஏ.ஓ., வை தாக்கிய சீனிவாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.