/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரவள்ளி பயிர் சாகுபடியில் அதிக மகசூல்; தொழில் நுட்பங்களை பயன்படுத்த 'டிப்ஸ்'
/
மரவள்ளி பயிர் சாகுபடியில் அதிக மகசூல்; தொழில் நுட்பங்களை பயன்படுத்த 'டிப்ஸ்'
மரவள்ளி பயிர் சாகுபடியில் அதிக மகசூல்; தொழில் நுட்பங்களை பயன்படுத்த 'டிப்ஸ்'
மரவள்ளி பயிர் சாகுபடியில் அதிக மகசூல்; தொழில் நுட்பங்களை பயன்படுத்த 'டிப்ஸ்'
ADDED : பிப் 10, 2025 07:21 AM
நாமக்கல்: 'மரவள்ளி பயிர் சாகுபடியில், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்' என, நாமக்கல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், மரவள்ளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 2024ல், 18,000 ஹெக்டேர் பயிரிடப்பட்டு, தற்போது அறுவடை நடந்து வருகிறது. அறுவடை முடிந்து மீண்டும் மரவள்ளி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள், தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம்.
குறிப்பாக, மரவள்ளி ரகங்களான வெள்ளை தாய்லாந்து, குங்கும் ரோஸ், முள்ளுவாடி மற்றும் வெள்ளை ரோஸ் போன்ற ரகங்கள் பயிரிடப்படுகின்றன. தோட்டக்கலைத்துறையில், நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு, 5 ஏக்கர் வரை, 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு, 5 ஹெக்டேர் வரை, 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள், விதை கரணைகளை நடவு செய்யும்போது, விதை கரணைகளை கார்பண்டாசிம், 2 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, விதை கரணைகளை நனைத்து நடவு செய்ய வேண்டும் அல்லது சூப்பர் பாஸ்பேட், ஒரு கிலோ உடன், வயல் மண்ணை சேர்த்து சேறு போன்று கலக்கி, அதில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
பூச்சி, நோய் மேலாண்மையில், இலைப்பேன், செம்பேன், வெள்ளை ஈ, மாவுபூச்சி மற்றும் மஞ்சள் தேமல் போன்ற நோய்களால் மரவள்ளியில், 25 முதல், 30 சதவீதம் மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்த புரோப்பார்கைட் இரண்டு மில்லி (அ) ஸ்பைரோமெசிபின், ஒரு மில்லி (அ) பெனஸாகுயின், இரண்டு மில்லி இதில் ஏதேனும் ஒன்றினை தெளித்து பயனடையலாம். மேலும், அந்தந்த வட்டாரங்களில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு, ஆலோசனை பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.