ADDED : ஏப் 16, 2026 05:31 AM
நாமக்கல் : 'நாமக்கல் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்த அதிகரித்து வருவதால், கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி குறையும்' என, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில், வரும், 18 வரை அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 100.4 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 77 டிகிரி பாரன்ஹீட் முதல் 78.8 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 35 முதல் 70 சதவீதம் வரை இருக்கும். காற்று தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் இருந்து, மணிக்கு, 2 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மாவட்டத்தில், 3 நாட்களும் மழைபெய்ய வாய்ப்பில்லை.
வெப்பம் அதிகரித்து வருவதால், கோழிப்பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, கோழிகள் தீவன எடுப்பு மிகவும் குறைந்துள்ளது. அதன் காரணமாக, முட்டை உற்பத்தியும், முட்டையின் எடையும் மிகவும் குறைந்துள்ளது.
தீவனத்தில் அமினோ அமிலங்கள், குறிப்பாக மித்தியோனின் மற்றும் லைசின் சேர்த்தல், தாவர எண்ணெயை கொண்டு எரிசக்தியின் அளவை உயர்த்துதல், எலக்ட்ரோலைட்ஸ் உப்புக்கள் மற்றும் வைட்டமின், 'சி' போன்றவற்றை கலந்து தர வேண்டும்.
அதிக அளவில் முட்டை ஓடு குறைபாடுகளை களைய, சோடா உப்பை டன்னிற்கு, 1.5-2.0 கிலோ வரை சேர்த்து அளிக்க வேண்டும். கோழிகளுக்கு அயற்சி ஏற்படாத வகையில், தீவனத்தை காலை, 5:00 மணி முதல்,- 10:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி முதல், 9:00 மணி வரை மட்டுமே தர வேண்டும்.
இதனால் வெப்ப அயர்ச்சியில் இருந்து கோழிகளை காப்பாற்றலாம். காலை முதல் இரவு வரை குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
