/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி வழிபாடு
/
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி வழிபாடு
ADDED : அக் 28, 2025 01:48 AM
நாமக்கல், கந்தசஷ்டியை முன்னிட்டு, நாமக்கல் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
நாமக்கல்-மோகனுார் சாலை, காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை, 6:15 மணிக்கு கணபதி பூஜையுடன் கந்த சஷ்டி பூஜை துவங்கியது. தொடர்ந்து, மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், தங்க கவசத்துடன் ராஜ அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு சந்தன காப்பு அலங்காரமும், 6:00 மணிக்கு முருகப்பெருமான் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடந்தது.
* நாமக்கல்-கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில், அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி வெள்ளிக்கவசத்தில், ராஜா அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மோகனுார்-நாமக்கல் சாலையில் உள்ள, காந்தமலை பாலசுப்ரமணியர் கோவில், கருங்கல்பாளைம், கரையான்புதுார் கருமலை, தண்டாயுதபாணி கோவில், ரெட்டிப்பட்டி, கந்தகிரி பழனியாண்டவர் கோவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
* சேந்தமங்கலம் தத்தகிரி முருகன், பாலதண்டாயுதபாணி கோவில்களில், மாலை, 6:00 மணிக்கு சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது. அதை தொடர்ந்து, கந்த சஷ்டியின் கடைசி நாளான இன்று மாலை, 6:00 மணிக்கு முருகன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்க உள்ளது.
* ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் உள்ள ராஜா சுவாமிக்கு, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், ராஜா சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* வெண்ணந்துார், கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி, சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* குமாரபாளையம், தேவாங்கர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், அரோகரா கோஷமிட்டு சுவாமியை வணங்கினர். திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவில், வட்டமலை முருகன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம் முருகன் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாலமுருகன் கோவில், கள்ளிபாளையம் முருகன் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

