ADDED : மே 31, 2024 03:11 AM
சீதாராம கல்யாண
மஹோத்ஸவம் துவக்கம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அக்ரஹாரத்தில், சீதாராம கல்யாண மஹோத்ஸவ விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் அக்ரஹாரத்தில், 36வது ஆண்டு சீதாராம கல்யாண மஹோத்ஸவம் விழா நடத்தப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு, நேற்று காலை சீதா ராம கல்யாண மஹோத்ஸவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம் செய்யப்பட்டது. பின்னர் ராம ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்துவிற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள, தமிழ்நாடு டாஸ்மாக் அலுவலகம் முன், விற்பனையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார்.
மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம், லஞ்சம்
கேட்டு தொழிலாளர்களை துன்புறுத்தி வருகிறது. மாதந்தோறும் சரக்கு விற்பனையில், 5 சதவீதம் பணத்தை லஞ்சமாக கேட்டு மிரட்டுகின்றனர். 60க்கும் மேற்பட்ட பணி மாறுதல்களை
தன்னிச்சையாக செய்தவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் கொடுக்க விரும்
பாதவர்களை, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், விற்பனையாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதை கண்டித்து
ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பாலிஷ் போட்டு மோசடிதங்க செயின் திருட்டு
கரூர்: கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 38. இவரது வீட்டுக்கு வந்த மூன்று பேர், பழைய தங்க நகைகளுக்கு குறைந்த செலவில் பாலிஷ் போட்டு தருவதாக கூறினர். இதை நம்பிய ஜெயலட்சுமி, இரண்டரை பவுன் செயினை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
செயினை பெற்றுக் கொண்ட அவர்கள், அதை ரசாயன திரவத்தில் கழுவி பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர். வாலிபர்கள் சென்ற சிறிது நேரத்தில், சந்தேகமடைந்த அவர், நகையை எடை போட்டுப் பார்த்ததில் ஒன்றே கால் பவுன் குறைவாக இருந்தது. இது குறித்து, பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்திஅரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். கருவூலத்துறை நிர்வாகத்தினர், ஊழியர் விரோத ஜனநாயக விரோத போக்குடன் நடக்கின்றனர். வருமான வரி பிடித்தம் செய்வதில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தனலட்சுமி, வெங்கடேஸ்வரன், ஆறுமுகம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சடையாண்டி, ஆசிரியர் முன்னேற்ற பேரவை செந்தில்குமார், முன்னாள் மாநில துணைத் தலைவர் மகாவிஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மின் கம்பியில் உரசி
வைக்கோல் லாரியில் தீ
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின் கம்பியில் உரசி தீ பிடித்தது. இதில் லாரி முழுவதும் எரிந்து சாம்பலானது.
புதுச்சேரியில் இருந்து வைக்கோல்
ஏற்றி வந்து, நாமக்கல் பகுதியில் விற்று வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி டிரைவர் சண்முகம், 42, லாரியில் வைக்கோல்களை ஏற்றி வந்து நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களில் விற்று வந்தார். அப்போது, நாரைகிணறு பிரிவு அருகே உள்ள, 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு விற்பதற்காக, 240 வைகோல் கட்டுகளை கொண்டு வந்துள்ளார்.
மேட்டுப்பட்டி பகுதியில் விவசாய நிலம் வழியாக லாரி சென்றபோது, அங்கு தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் உரசியது. இதில் ஏற்பட்ட தீந்பொறியில் வைக்கோல் பற்றி எரிந்தது. டிரைவர் சண்முகம் லாரியை நிறுத்தி விட்டு தீயை அணைக்க முயற்சித்தார். ஆனால், தீ மளமளவென பரவியது. ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் வைக்கோல் மற்றும் லாரி ஆகியவை எரிந்து சாம்பலானது.
இது குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.