/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கிட்னி' கொடுத்தவர்கள் உடல் ரீதியாக பாதிப்பு
/
கிட்னி' கொடுத்தவர்கள் உடல் ரீதியாக பாதிப்பு
ADDED : ஆக 05, 2025 01:40 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதி யில், 'கிட்னி' கொடுத்தவர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருவதால், மருத்துவ உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் என்பதால் திடீர் செலவு, அவசர தேவைக்கு கடன் வாங்குகின்றனர். அவ்வாறு வாங்கிய கடனை, ஒரு கட்டத்தில் திருப்பி செலுத்த முடியாமல் வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி என, கடன் சுமை அதிகரிக்கிறது. இதனால் வாங்கிய கடனை விட, இரண்டு மடங்கிற்கு மேல் அசல் தொகை வந்து விடுகிறது. அவற்றை செலுத்த முடியாத நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு வறுமையில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை குறிவைத்து, கிட்னி விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என, புரோக்கர்கள், தொழிலாளிர்களை மூளைச்சலவை செய்கின்றனர். இதில் சிக்கும் தொழிலாளர்கள், தங்களின் ஒரு கிட்னியை விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், கடந்த, 25 ஆண்டுக்கு முன் கிட்னி கொடுத்தவர்களை அழைத்து, அவர்களின் குறைகள் கேட்கும் ஆலோசனை கூட்டம், காவிரி பகுதியில் உள்ள சி.ஐ.டி.யு., அலுவலகத்தில், கடந்த, 31ல் நடந்தது. இதில், 25 ஆண்டுக்கு முன், கிட்னி கொடுத்த, 50 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 'வறுமையின் காரணமாக கிட்னி கொடுத்தோம். தற்போது வயதாகி விட்டது. கடினமான வேலை செய்ய முடியவில்லை. உடல் ரீதியாக பல பிரச்னை ஏற்படுவதால், மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும்' என, தெரிவித்தனர்.
பள்ளிப்பாளையத்தில் காவிரி, அன்னை சத்யாநகர், கரட்டாங்காடு, ஆவாரங்காடு, ஆவத்திபாளையம் உள்ளிட்ட பல பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கிட்னி கொடுத்துள்ளனர். கிட்னி கொடுத்த அனைவரும் தற்போது உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவ மனையில் பரிசோதனை செய்து, முறையான மருத்துவ சிகிச்சை, ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் கூறுகையில், ''கிட்னி கொடுத்தவர்கள் உடல் பிரச்னை என்றால், உடனடியாக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து சகிச்சை பெறலாம். தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படும்,'' என்றார்.

