/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விஸ்வரூபம் எடுக்கிறது கிட்னி விற்பனை விவகாரம் மருத்துவ பதிவுகளில் போலி முகவரி கொடுத்தது அம்பலம்
/
விஸ்வரூபம் எடுக்கிறது கிட்னி விற்பனை விவகாரம் மருத்துவ பதிவுகளில் போலி முகவரி கொடுத்தது அம்பலம்
விஸ்வரூபம் எடுக்கிறது கிட்னி விற்பனை விவகாரம் மருத்துவ பதிவுகளில் போலி முகவரி கொடுத்தது அம்பலம்
விஸ்வரூபம் எடுக்கிறது கிட்னி விற்பனை விவகாரம் மருத்துவ பதிவுகளில் போலி முகவரி கொடுத்தது அம்பலம்
ADDED : ஜூலை 19, 2025 01:12 AM
நாமக்கல்:வறுமையில் வாடும் பெண்களை மூளைச்சலவை செய்து கிட்னி விற்பனையில் ஈடுபட்ட புரோக்கர்கள், பிரபல மருத்துவமனையில் கொடுத்த முகவரியும் போலி என, விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம், மருத்துவ துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, பெங்களூரு பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளுக்கு, கிட்னி புரோக்கர்கள், பெண்களை அழைத்துச் சென்று, கிட்டி விற்பனை செய்யப்பட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
குறிப்பாக, இவர்கள், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்தவர்கள் என, குறிப்பிடப்பட்டிருந்தது.
மோசடி
நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவுப்படி, சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையில், நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழுவினர், பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகர் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர்.
அதில், கிட்னி விற்பனைக்கு, இடைத்தரகராக ஆனந்தன், 45, என்பவர் செயல்பட்டது தெரியவந்தது.
இவர், திருச்சி, பெரம்பலுார், கொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளுக்கு ஏழை தொழிலாளர்களை அழைத்துச்சென்று, பணம் வாங்கி தருவதாக கூறி, கிட்னியை விற்றது தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் கூறியதாவது:
கிட்னி விற்பனை மோசடி குறித்து நாங்கள் விசாரணை மேற்கொண்டோம். அதில் குறிப்பிடப்பட்ட கவுசல்யா, விஜயா ஆகிய இருவரும், அந்த முகவரியில் இல்லை.
அறுவை சிகிச்சை
மேலும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரக குழுவினர், திருச்சி, சிதார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியதில், ஆறு பேரின் முகவரியை எங்களுக்கு வழங்கினர். அந்த முகவரியும் போலி என தெரிய வந்தது.
தலைமறைவாக உள்ள ஆனந்தன் சிக்கினால் மட்டுமே இதற்கெல்லாம் விடை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல, ஈரோட்டில் உள்ள சில தனியார் கிட்னி சிகிச்சை தொடர்பான மருத்துவமனைகளில், சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையின் சென்னை இயக்குந ரக குழுவினர், ஈரோடு இணை இயக்குநர் சாந்தகுமாரி தலைமையிலான குழுவினர், நாமக்கல் இணை இயக்குநர் ராஜ்மோகன் குழுவினர் சேர்ந்து ஆய்வு நடத்தினர்.
இதில், சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட விபரங்களை கேட்டுஉள்ளனர்.
ஈரோடு மாவட்ட இணை இயக்குநர் சாந்தகுமாரி கூறுகையில், ''பள்ளிபாளையம் பிரச்னையுடன், ஈரோடு மருத்துவமனைகளுக்கு தொடர்புள்ளதா என விசாரிக்கிறோம். விரைவில் குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் வழங்கி விசாரணையை தொடர்வோம்,'' என்றார்.
இந்நிலையில், நேற்று மாலை, 6:30 மணிக்கு, சென்னை சுகாதாரத்துறை சட்டப்பிரிவு இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் மருத்துவ குழுவினர், அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், கிட்னி கொடுத்த கவுசல்யாவிடம் விசாரணை நடத்தினர்.
கவுசல்யாவை காரில் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு தனி அறையில் மருத்துவ குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், வாக்கு மூலம் பெற்று வீடியோ பதிவு செய்தனர். கிட்னி கொடுத்த மற்றொரு பெண் விஜயா தலைமறைவாக உள்ளார்.
விசாரணை குழு
இதற்கிடையே, சட்ட விரோத கிட்னி விற்பனை குறித்து விசாரிக்க, தமிழக சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையில், விசாரணை குழு அமைத்து, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.