/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையத்தில் மீண்டும் கிட்னி விற்பனை அதிகாரிகள் விசாரணை; புரோக்கர் தலைமறைவு
/
பள்ளிப்பாளையத்தில் மீண்டும் கிட்னி விற்பனை அதிகாரிகள் விசாரணை; புரோக்கர் தலைமறைவு
பள்ளிப்பாளையத்தில் மீண்டும் கிட்னி விற்பனை அதிகாரிகள் விசாரணை; புரோக்கர் தலைமறைவு
பள்ளிப்பாளையத்தில் மீண்டும் கிட்னி விற்பனை அதிகாரிகள் விசாரணை; புரோக்கர் தலைமறைவு
ADDED : ஜூலை 18, 2025 02:22 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து மீண்டும் கிட்னி விற்பனை நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, போலீசார் மற்றும் சுகாதாரம், வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கடந்த, பத்தாண்டுகளுக்கு முன், வறுமையில் தவித்த ஏழை தொழிலாளர்களை குறிவைத்து, புரோக்கர்கள் மூலம் மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனை நடந்து வந்தது. போலீசார் நடவடிக்கைக்கு பின், சில ஆண்டுகளாக கிட்னி புரோக்கர் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த கிட்னி புரோக்கர் ஒருவர், பணத்தேவையால் சிரமப்பட்டு வரும் தொழிலாளர்களிடம் மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும்; இதில் கூறிய பணத்தை தராமல் மோசடி செய்ததாகவும், 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் தகவல் பரவியது.
இதையடுத்து, நேற்று, நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், குமாரபாளையம் தாசில்தார் சிவகுமார், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் போலீசார், அன்னை சத்யா நகர் பகுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் கூறியதாவது: பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகர் பகுதியில் கிட்னி மோசடி நடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட பகுதியில், மருத்துவத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினோம். இதில் சம்பந்தப்பட்ட, கிட்னி புரோக்கர் ஆனந்தன் வீடு பூட்டப்பட்டிருந்தது. அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில், நேற்று முன்தினம் இரவு முதலே ஆனந்தன் வீட்டிற்கு வராதது தெரியவந்தது.
மேலும், திருப்பூரில் அவரது குடும்பத்தினர் வசிப்பதாகவும், ஆனந்தனை பார்க்க அடிக்கடி சிலர் வந்து சென்றதாகவும், இரு பெண்களிடம் கிட்னி விற்பனைக்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் மூலம், ஆனந்தன் மீது புகாரளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.