/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'குன்னமலை வல்லீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும்'
/
'குன்னமலை வல்லீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும்'
'குன்னமலை வல்லீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும்'
'குன்னமலை வல்லீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும்'
ADDED : மே 03, 2024 07:23 AM
ப.வேலுார் : சிதிலமடைந்த குன்ன மலை வல்லீஸ்வரர் கோவிலில், லோக்சபா தேர்தல் முடிந்தவுடன், நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகள் துவங்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் உறுதியளித்தார்.நாமக்கல், கந்தம்பாளையம் அருகே குன்னமலை கிராமத்தில், சிறிய மலைகுன்றின் மீது, பழமைவாய்ந்த வல்லீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இது வரலாற்று சிறப்பு மிக்க கோவில். இந்த கோவில் முழுதும் பெரிய, பெரிய கற்களை கொண்டு கலைநயம் மிக்க சிற்பக்கலையுடன் எழில்மிகு தோற்றத்துடன் வடக்கு, தெற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சிவன், அம்பாள், முருகன் சன்னதிகள் தனித்தனியாக, மூன்று பகுதிகளாக காணப்படுகின்றன.இந்த சன்னதியில், கற்களால் ஆன சுற்றுச்சுவர்களில் கலை வேலைப்பாடுகள் மிக்க மணி ஆரங்கள், மீன் போன்ற எண்ணற்ற சிற்பங்கள் அடங்கிய துாண்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் மூலம், குன்னமலை முற்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்மணி கற்கள் வாணிபத்தில் சிறந்து விளங்கியது புலப்படுகிறது. மேலும், இக்கோவிலில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகளில் கொல்லிமலை நாட்டு வல்லீஸ்வரர் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பாறைகள் சிதிலமடைந்துள்ளதால் மற்ற தகவல்கள் தெளிவில்லாமல் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் காணப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது தெளிவாகி உள்ளது.கொங்குநாட்டின் சிற்பங்களை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் வகையில், இக்கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆன்மிக அன்பவர்கள், அப்பகுதி மக்களின் நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை, ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி தலைமையிலான குழுவினர், குன்னமலை வல்லீஸ்வரர் கோவிலில் திருப்பணி நடத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கோவிலில் சிதிலமடைந்த பகுதிகள், பிரகாரத்திற்கு செல்லும் வழிகள், பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்கு பாதைகள் அமைக்கும் இடம் குறித்து ஆய்வு செய்தார். லோக்சபா தேர்தல் முடிவு முடிந்தபின், திருப்பணி தொடங்குவதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் விரைவில் துவங்கும் என உறுதி அளித்தார். குன்னமலை கிராம பஞ்., தலைவர் பூங்கொடி, முன்னாள் தலைவர் குணசேகரன், மண்டல பொறியாளர், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.