ADDED : மார் 17, 2024 02:57 PM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, லோடு ஆட்டோ டயர் வெடித்து நெடுஞ்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்திலிருந்து, சரக்கு லோடு ஆட்டோவில், 2 டன் மர துண்டுகளை ஏற்றிக்கொண்டு, டிரைவர் துரை நாமக்கல்லை நோக்கி சென்று கொண்டிருந்தார். வெண்ணந்துார் அருகே, ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோவின் பின்புற டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.
இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லோடு ஆட்டோ, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வந்த நெடுஞ்சாலை போலீசார், மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டனர். இதுகுறித்து வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

