ADDED : மே 16, 2026 05:10 AM

ராசிபுரம்:ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, ராசிபுரம் அடுத்த உடையார்பாளையம் பகுதியில் உள்ள விஸ்வநாதன் என்பவரது நிலத்திலிருந்து டிப்பர் லாரியில் மண் ஏற்றி செல்லப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராசிபுரம் தாசில்தார் சசிகுமார், நேற்று அதிகாலை அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். அப்போது உடையார்பாளையம் சாலையில் மண் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டார். இந்த சோதனையின் போது, அந்த நிலத்திலிருந்து மண் வெட்டி எடுப்பதற்கோ அல்லது லாரியில் ஏற்றிச் செல்வதற்கோ எவ்வித முறையான அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்தது.
சட்டவிரோதமாக மண் கடத்தி வந்தது உறுதியானதை தொடர்ந்து, தாசில்தார் சசிகுமார் அந்த டிப்பர் லாரியை மண்ணுடன், நேற்று பறிமுதல் செய்தார். அந்த லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து வருவாய்த்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
