ADDED : ஜன 19, 2025 06:57 AM
எருமப்பட்டி: நாமக்கல் - துறையூர் சாலை, அண்ணா நகரில் இருந்து திருச்சி சாலைக்கு செல்லும் ராசாகவுண்டர் சாலையில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் மின் கம்பங்கள் மிக அருகில் உள்ளதால், அடிக்கடி கனரக வாகனங்கள் மோதி மின் கம்பங்கள் சேதமடையும் சம்பவம் நடந்து வருகின்றது.
இதேபோல், நேற்று முன்தினம் இரவு, திருச்சி சாலையில் இருந்து, துறையூர் சாலைக்கு சென்ற கான்கிரீட் கலவை லாரி ஒன்று, அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில், மின் கம்பம் மற்றும் துணையாக நிறுத்தியிருந்த மற்றொரு மின் கம்பம் என, 2 கம்பங்கள் உடைந்தன. இதனால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரனவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து, நேற்று காலை 11:00 மணிக்கு மின்வாரிய பணியாளர்கள், மின் கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

