/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எம்.சாண்ட் நிறுவனம் பதிவு சான்று பெற கெடு
/
எம்.சாண்ட் நிறுவனம் பதிவு சான்று பெற கெடு
ADDED : மே 24, 2025 01:06 AM
நாமக்கல், 'கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள், முகவர்கள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பித்து பதிவு சான்று பெற வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், சேந்தமங்கலம், மோகனுார், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் தாலுகாக்களில், கிராவல், சாதாரண கற்கள், கிரானைட் குவார்ட்ஸ், பெல்ஸ்பர் ஆகிய கனிமங்களுக்கு, குவாரி குத்தகை லைசென்ஸ் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள குவாரிகளிலிருந்து வெட்டியெடுத்து, அரசுக்கு உரிய கட்டணம் செலுத்தி, கனிமங்களை வாகனங்களில் எடுத்து செல்வதற்காக, கடந்த ஏப்., 15 முதல், 'ஆன்லைன்' மூலம் பர்மிட்டு வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அரசு அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச்செல்லுதல், சேமித்து வைத்தல், கனிமங்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் இதர வகை கிரஷர் பொருட்களாக தயாரித்து எடுத்துச் செல்வதை கண்காணித்து தடுக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து கிரஷர், எம்.சாண்ட் ஆலை உரிமையாளர்கள், கனிமங்கள் சேமித்து வைத்துள்ள முகவர்கள், உரிய விபரங்களுடன் விண்ணப்பித்து, 10,000 ரூபாய் கட்டணமாக செலுத்தி, பத்து ஆண்டுகள் வரை பதிவு சான்று கோரி, ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க தவறும் கிரஷர், எம்.சாண்ட் யூனிட் உரிமையாளர்கள் மற்றும் கனிமங்கள் சேமித்து வைத்துள்ள முகவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.