/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரும் நாளெல்லாம் நல்ல நாளாக இருக்கட்டும்
/
வரும் நாளெல்லாம் நல்ல நாளாக இருக்கட்டும்
ADDED : அக் 31, 2024 12:16 AM
வரும் நாளெல்லாம் நல்ல நாளாக இருக்கட்டும்
மனத்தீமை எனும் நரகாசூரன் அழிந்து
'கிருஷ்ணன்' எனும் தீபம் திக்கெட்டும்
பிரகாசிக்கும் தீபாவளியன்று கிருஷ்ணரை
வழிபட்டால் நல்வாழ்வு உண்டாகும்
* நற்குணங்களின் இருப்பிடமே! அன்பில் சிறந்தவனே! அசுரர்களை துவம்சம் செய்தவனே! இடைக்குளத்தின் தவக்கொழுந்தே! கண்ணனே! மின்னல் போல் ஜொலிக்கும் பட்டு பீதாம்பரதாரியே! கிருஷ்ணனே!
* என் மனத்தாமரையில் எப்போதும் இருப்பவனே! நந்தகோபர் வளர்த்த பிள்ளையே! எல்லா துன்பங்களையும் அடியோடு போக்கியருள்பவனே! லீலைகள் பல புரிந்ததால் கோபியர் மனதை விட்டு அகலாத செல்வமே! கிருஷ்ணனே! உன்னை வழிபடுகிறேன்
* கதம்ப மலரை காதில் குண்டலமாக தரித்தவனே! மிக அழகான கன்னங்களை கொண்டவனே! கோபிகை பெண்களின் நாயகனே! நந்தகோபருக்கும் யசோதைக்கும் அன்பை பொழிந்தவனே! வழிபடும் அடியவருக்கு சுகம் தருபவனே! கோபி கிருஷ்ணனே! உன்னை தியானிக்கிறேன்
* பூபாரத்தை போக்கியவனே! பிறப்பு, இறப்பு எனும் சம்சார பந்தத்தில் இருந்து விடுவிப்பவனே! பிறவி கடலை கடக்க செய்யும் தோணியே! யசோதையின் இளஞ்சிங்கமே! வெண்ணெயை விரும்பி திருடுபவனே! சாதுக்கள் மீது பற்று கொண்டவனே! நாளும் புதிய கோலத்தில் காட்சி அளித்தவனே! கிருஷ்ணனே! உன்னை சரணடைகிறேன்
* இடைக்குலத்தின் திலகமாக திகழ்பவனே! ஆயர்குலத்தின் அணிவிளக்கே! ஆனந்தம் அருள்பவனே! தாமரை போல இருக்கும் என் மனதில் மோகத்தை துாண்டுபவனே! சூரியன் போல் பிரகாசிப்பவனே! யாவரும் விரும்பும் அழகு மிக்கவனே! கடைக்கண் பார்வையால் அன்பர்களுக்கு வேண்டும் வரமருள்பவனே! கிருஷ்ணனே! உன்னை போற்றி மகிழ்கிறேன்
* ஆயர்பாடிக்கு அலங்காரமே! பாவங்களை போக்குபவனே! பக்தர்களின் மனதை மகிழ்விப்பவனே! நந்தகோபரின் புத்திரனே! மயில் தோகையை தலையில் சூடியவனே! இனிய புல்லாங்குழலை கையில் ஏந்தியவனே! கோபியரிடம் விளையாடியவனே! கிருஷ்ணனே! உன்னை துதிக்கிறேன். உன்னருளால் உலகம் வரும் நாட்களில் செழிப்புடன் வாழட்டும்.
மறக்குமா 'தல தீபாவளி' தருணம்
திருமணம் ஆன முதல் ஆண்டு மனைவியோடு கொண்டாடும் தீபாவளியை, 'தலை தீபாவளி' என அழைக்கப்படும். இதன் மகிழ்ச்சிக்கு அளவில்லை. திருமணத்துக்கு பின் வரும் பண்டிகைகள், மணமகன் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுகிறது.
புதுமண தம்பதியை, பெண்ணின் பெற்றோர், தலை தீபாவளியை கொண்டாட வீட்டுக்கு அழைப்பர். அப்போது அவர்கள் தரும் சீர்வரிசையில் புத்தாடைகளுடன் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பூ, பழங்கள், இனிப்புகள் தவறாமல் இடம் பெறும். தீபாவளியன்று அதிகாலை எழுந்து, தலைக்கு எண்ணெய் வைத்து சீயக்காய் தேய்த்து குளித்து புத்தாடை அணிவர் புதுமண தம்பதியர்.
வீட்டில் சுவாமி கும்பிட்ட பின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி, இனிப்புகளை உண்டு மகிழ்வர். மனைவியுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளை பட்டாசு வெடிப்பார். சில தம்பதியருக்கு குழந்தையுடன் சேர்த்து தலை தீபாவளியை கொண்டாடும் வாய்ப்பு அமையும். அது சிறப்பு வாய்ந்த தலை தீபாவளியாய் அவர்களுக்கு அமையும்.
தீபங்களின் திருவிழா
ஒளியின் சிறப்பை உணர்த்தும் விழா தீபாவளி. தீபங்களின் வரிசை என்பதே, 'தீபாவளி' எனப்படுகிறது. வெளியுலகத்திலுள்ள இருள் மட்டுமின்றி மனதில் இருக்கும் தீமை எனும் அக இருள் நீங்க, தீபாவளி வழிகாட்டுகிறது. புத்தாடை உடுத்துவது, பலகாரம் சாப்பிடுவது, பட்டாசு வெடிப்பது, உறவினர்களை சந்திப்பது என வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமின்றி தன்னை போன்று பிறரை நேசிக்கும் அன்பு மனம் வேண்டும் என்பதை, இது உணர்த்துகிறது.
கங்கைக்கும்மேலான காவிரி
தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் பெருமையாக சொல்கிறோம். ஆனால் இந்த ஸ்நானத்தை உருவாக்கிய கிருஷ்ணரோ, தன் பாவம் தீர காவிரிக்கு கரைக்கு வந்தார். வீரனான நரகாசுரனை கொன்றதால் அவருக்கு வீரஹத்தி தோஷம் உண்டானது. அவரது நீலமேனி வண்ணம் ஒளியிழந்து மங்கிப்போனது.
அதை தீர்க்க கைலாயம் சென்று சிவனிடம் உபாயம் கேட்டார். 'கிருஷ்ணா! துலா மாதமான ஐப்பசி மாதம் முழுதும் சூரிய உதயத்தில் இருந்து ஆறு நாழிகை(2 மணி, 24 நிமிடம்) நேரத்துக்குள் காவிரியில் நீராடினால் வீரஹத்தி தோஷம் நீங்கும்' என்றார்.கங்கா ஸ்நானத்தக்கு அருள் செய்த கிருஷ்ணர், தீபாவளியன்று காவிரியில் நீராடி தன் பாவம் போக்கினார். இதனால் கங்கையை விட காவிரி முக்கியத்துவம் பெறுகிறது.
காவிக்கு இல்லைகட்டுப்பாடு
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிப்பது அவசியம். ஐப்பசி மாதம் குளிர்காலம் என்பதால் வெந்நீரில் குளிக்கிறோம்.எண்ணெய் தேய்த்து குளிப்பதிலும் சிறப்பு இருக்கிறது. நல்ல எண்ணெயில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையை கண்டால் அபசகுனம் என்பர்.ஆனால் தீபாவளியன்று எண்ணெயில் லட்சுமி இருப்பதால் நீராடுவோருக்கு வளம் பெருகும். காவியணிந்த துறவியும் கூட எண்ணெய் தேய்த்து நீராடி தீபாவளியை கொண்டாட வேண்டும்.இதன்மூலம் முன்வினைப்பாவம் கூட நீங்கும்.

