/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ராசிபுரம் ஒருவழிச் சாலையில் வேகத்தடை நகர மக்கள் கோரிக்கை
/
ராசிபுரம் ஒருவழிச் சாலையில் வேகத்தடை நகர மக்கள் கோரிக்கை
ராசிபுரம் ஒருவழிச் சாலையில் வேகத்தடை நகர மக்கள் கோரிக்கை
ராசிபுரம் ஒருவழிச் சாலையில் வேகத்தடை நகர மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 11, 2011 11:58 PM
ராசிபுரம்: 'ராசிபுரம்-புதுப்பாளையம் ரோடு, வீ .நகர், டி.வி.எஸ்., சாலை வழியாக செல்லும் ஒரு வழிச்சாலையில் விபத்து தவிர்க்கும் வகையில், வேகத்தடை அமைக்க வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராசிபுரம் அதன் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. அப்பள்ளிக், கல்லூரி வாகனங்கள் நகரினுள் காலை, மாலை வேளைகளில் நுழைந்து செல்வதால், கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுபோல், பஸ் ஸ்டாண்ட் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்டை ஒட்டி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. அதனால், அன்றைய தினம் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாமல் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பால், பிற தினங்களிலும் வாகனப்போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மேலும், பஸ் ஸ்டாண்டினுள் உள்ள மினி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தினுள் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக காலை, மாலை வேளையில் பஸ் ஸ்டாண்ட் உள்ளேயும் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஒருவழி பாதை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதுப்பாளையம் ரோடு, வீ .நகர், டி.வி.எஸ்., சாலை வழியாக, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனங்கள் செல்ல வேண்டும். அதில், டி.வி.எஸ்., சாலையில் நகராட்சி நடுநிலைப்பள்ளியும், அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புற வாசலும் உள்ளது. மேலும், அச்சாலையில் கல்யாண மண்டபம், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. குறுகலான சாலை என்பதுடன், அதிவேகமாக வாகனங்கள் செல்வதால், விபத்துகளும் நடக்கிறது. இதைத் தவிர்க்க, அதி வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த, சி.பி. கண்ணையா தெரு, எல்லப்பா தெரு மற்றும் டி.வி.எஸ்., சாலை ஆகிய மூன்று இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மேற்குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடை செயல்பட்டு வந்தது. இச்சூழலில் புதிதாக தார் ரோடு அமைத்தபோது, வேகத்தடை அகற்றப்பட்டது. விபத்து தவிர்க்கும் நோக்கில், மீண்டும் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பதே, மக்களின் கோரிக்கை.