/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசியல் கட்சியினரால் நிரம்பிய நாமக்கல் நகரம்
/
அரசியல் கட்சியினரால் நிரம்பிய நாமக்கல் நகரம்
ADDED : செப் 30, 2011 01:42 AM
நாமக்கல்: வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, நாமக்கல்
நகராட்சி, யூனியன் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்ய ஏராளமான அரசியல்
கட்சியினர், சுயேட்சைகள் குவிந்தனர். அதனால், அனைத்து சாலைகளிலும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நாமக்கல் நகரமே ஸ்தம்பித்தது.நாமக்கல்
மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகள், 19 டவுன் பஞ்சாயத்து, 15 யூனியன், 17
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், 322 பஞ்சாயத்துகள் உள்ளன. அவற்றுக்கான
வேட்புமனு தாக்கல், கடந்த 22ம் தேதி முதல் துவங்கியது. முதல் நாளில்
வேட்புமனு தாக்கல் குறைந்திருந்தது.அடுத்தடுத்த நாட்களில், அ.தி.மு.க.,
தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், தங்களது சேர்மன், கவுன்சிலர்
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பை வெளியிட்டது. அதையடுத்து, அரசியல்
கட்சியினர், தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் துவக்கினர். கடந்த
27ம் தேதி, மஹாளய அமாவாசை என்ற போதிலும், அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை
என்பதால், வேட்புமனு தாக்கல் குறைந்திருந்தது.மறுநாள் 28ம் தேதி, அரசியல்
கட்சியினர், சுயேட்சை என யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. அதனால், கடைசி
நாளான நேற்று, வேட்புமனு தாக்கல் அதிகமாக இருக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமான
அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் நகராட்சி, யூனியன், அந்தந்த பஞ்சாயத்து
அலுவலகம் ஆகியவற்றில் குவிந்தனர்.
நாமக்கல் நகராட்சியை பொறுத்தவரை, தி.மு.க., சார்பில் போட்டியிடும் சேர்மன்
வேட்பாளர் மட்டும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு
11 மணியளவிலேயே, தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதையடுத்து, மத்திய இணையமைச்சர் காநதிச்செல்வன் தலைமையில், தி.மு.க.,
சேர்மன் வேட்பாளர் செல்வராஜ், தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர்கள் அனைவரும்
நேற்று மனுதாக்கல் செய்ய, நகராட்சியில் குவிந்தனர்.முன்னதாக, அண்ணாதுரை
சிலைக்கு மாலை அணிவித்த தி.மு.க.,வினர், பட்டாசு வெடித்து ஏராளமான
வாகனங்கள் புடைசூழ, நகராட்சி அலுவலகத்துக்கு வந்து வேட்புமனு தாக்கல்
செய்தனர். தே.மு.தி.க., சார்பில், சேர்மன் வேட்பாளராக கட்சியின் நிர்வாகி
வேலு அறிவிக்கப்பட்டார். அவர், தனது ஆதரவாளர்களுடன் ஏராளமான வாகனங்களுடன்
சென்று நகராட்சியில் மனுதாக்கல் செய்தார்.காங்கிரஸ் சேர்மன் வேட்பாளரான
வாசு, தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இது
ஒருபுறம் இருக்க, அ.தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர்கள், சுயேட்சைகள் என
ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய, நகராட்சி அலுவலகத்தில்
குவிந்தனர்.அதுபோல், மோகனூர் சாலையில், நாமக்கல் யூனியன் அலுவலகம் உள்ளது.
யூனியனுக்கு உட்பட்ட ஒன்றிய கவுன்சிலர், பஞசாயத்து தலைவர் மற்றும் மாவட்ட
கவுன்சிலர் பதவியிடங்களுக்கு, 25 பஞ்சாயத்துகளை சேர்ந்த அ.தி.மு.க.,
தி.மு.க., தே.மு.தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள்
ஏராளமானோர் குவிந்து, வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதனால், யூனியன் அலுவலக வளாகம், வேட்பாளர் மற்றும் அவர்களை சார்ந்த
ஆதரவாளர்களால் நிரம்பியது. அதே வேளையில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் லாரி
உள்ளிட்ட வாகனங்களில், தங்களது ஆதரவாளர்களை அழைத்து வந்தனர். அதனால்,
அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நகரமே ஸ்தம்பித்தது.
அதனால், நகர மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.காற்றில் பறந்த தேர்தல்
விதிவேட்புமனு தாக்கல் செய்ய வருவவோர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான
வாகனங்களில் மட்டுமே வரவேண்டும். அதுபோல், மனுதாக்கல் செய்ய வேட்பாளர்
உட்பட ஐந்து பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்பது தேர்தல் விதிமுறை.
இவ்விதிமுறையை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, அரசியல்
கட்சியினர் உட்பட ஒருவரும் கடைபிடிக்கவில்லை.
அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸாரும், கைகட்டி வேடிக்கை மட்டும் பார்த்தது, மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.