ADDED : ஜூன் 27, 2024 03:35 AM
கள்ளச்சாராய சம்பவத்தை
கண்டித்து வி.சி., ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, பழைய ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே, நாமக்கல் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பவத்தை கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை முற்றிலுமாக மூட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.
இதில், முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடவும் தமிழக அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். திருச்செங்கோடு தலைவர் சக்திபரமசிவம் வரவேற்றார். மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், சட்டசபை தொகுதி செயலாளர் சிந்தனை செல்வன், சேலம் மண்டல துணை செயலாளர் அரசன், திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் தினேஷ் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு
எண்ணும் எழுத்தும் பயிற்சி
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வட்டார வளமையத்தில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் சக்திவேல், கோபாலகிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தனர். இதில், பாடவாரியாக மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய திறன்கள், ஆசிரியர் கையேட்டில் உள்ள புதுமையான கருத்துக்கள், மாணவர்களின் மொழித்திறனை மேம்படுத்தி கொள்ளுதல், மேலும் தொழில்நுட்ப கருவிகளை கையாளும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கடந்த, இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர் எண்ணும், எழுத்தும் பயிற்சியில் பெற்ற அனுபவங்களை கொண்டு, மாணவர்களை ஆராய்ச்சியாளராகவும், படைப்பாளர்களாகவும், வகுப்பறை படைப்பாற்றல் களமாகவும் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
வலியுறுத்தப்பட்டது.
திருமணிமுத்தாற்றில்
சுகாதார சீர்கேடு
மல்லசமுத்திரம்: ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மல்லசமுத்திரத்தில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில், அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து கோழிக்கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டியுள்ளனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இவ்வழியாக செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கோழிக்கழிவுகளை அகற்றவும், இனிமேல் இந்த இடத்தில் கோழிக்கழிவுகளை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விபத்துகளை தவிர்க்க
'யு-டர்ன்' வளைவு அமைக்க முடிவு
நாமக்கல்: கோவையில், சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாநில நெடுஞ்சாலைகளில், 'யு-டர்ன்' வளைவுகள் ஏற்படுத்தப்பட்டு, விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் உமா அறிவுறுத்தல்படி, அங்குள்ள சாலை பாதுகாப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு, நாமக்கல்லில் உள்ள சேலம் சாலை, மோகனுார் சாலை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் போது, நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உமா மகேஸ்வரி, சக்திவேல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் உடன் இருந்தனர். அப்போது, நாமக்கல் பகுதியிலும், 'யு-டர்ன்' வளைவுகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. 'இந்த பணி இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.