ADDED : ஜூன் 27, 2024 03:57 AM
காலாவதி பொருள் விற்ற
2 பேக்கரி கடைக்கு 'சீல்'
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில், காலாவதி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா, தினசரி மார்க்கெட் காய்கறி கடைகளுக்குள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா என, நகராட்சி கமிஷனர் சேகர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் தின்பண்டங்கள் விற்ற, இரண்டு பேக்கரி கடைகளுக்கு, 'சீல்' வைத்து, தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
இதேபோல், மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு, தலா, 500 ரூபாய் மற்றும் சில கடைகளுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம், 30க்கும் மேற்பட்ட கடைகளுக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின் போது, நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
துாய்மை பணியாளருக்கு
பல் மருத்துவ முகாம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி அலுவலகத்தில் பல் மருத்துவ முகாம் நடந்தது. சேர்மேன் நளினி சுரேஷ்பாபு, பல் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். முகாமில், 240க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
திருச்செங்கோடு, ஜே.சி.ஐ., டிவைன் மற்றும் விவேகானந்தா பல் மருத்துவ கல்லுாரி இணைந்து, பல் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நகராட்சி பொறியாளர் சரவணன், ஜே.சி.ஐ., டிவைன் தலைவர் அருண், செயலாளர் பூபதி, பொருளாளர் ஸ்ரீவிகாஸ், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.