/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் தேசிய ஒற்றுமை தின பேரணி
/
நாமக்கல்லில் தேசிய ஒற்றுமை தின பேரணி
ADDED : நவ 14, 2025 01:38 AM
நாமக்கல், சர்தார் வல்லபாய் பட்டேலின், 150-வது பிறந்த தின விழாவை முன்னிட்டு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், நாமக்கல்லில் தேசிய ஒற்றுமை தின பேரணி நடந்தது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின், 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தின பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின்கீழ், நாமக்கல்லில் இயங்கி வரும் எனது இளைய பாரதம் அலுவலகம் மற்றும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து, நாமக்கல் பூங்கா சாலையில் ஒற்றுமை தின பேரணியை நடத்தின.
முன்னதாக சர்தார் வல்லபாய் படேல் உருவப்படத்திற்கு, மலர்கள் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், தேச ஒற்றுமைக்கான பண்புகளை தொடர்ந்து கடைபிடித்தல் மற்றும் சுதேசி பொருள்களை அதிகளவில் பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் அனைவரும் உறுதிமொழி
ஏற்றுக்கொண்டனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து, ஒற்றுமை தின பேரணியை டி.எஸ்.பி., செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பூங்கா சாலை, கோட்டை சாலை, பரமத்தி சாலை, அம்மா உணவகம் வழியாக மீண்டும் பூங்கா சாலையில் பேரணி நிறைவடைந்தது. மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா, எனது பாரதம் அலுவலக கணக்கு மற்றும் நிகழ்ச்சி உதவியாளர் வள்ளுவன் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

