/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புது மாப்பிள்ளை தற்கொலை 11வது திருமணம் செய்த பெண், 5 புரோக்கர்கள் கைது
/
புது மாப்பிள்ளை தற்கொலை 11வது திருமணம் செய்த பெண், 5 புரோக்கர்கள் கைது
புது மாப்பிள்ளை தற்கொலை 11வது திருமணம் செய்த பெண், 5 புரோக்கர்கள் கைது
புது மாப்பிள்ளை தற்கொலை 11வது திருமணம் செய்த பெண், 5 புரோக்கர்கள் கைது
ADDED : ஜூலை 15, 2025 01:57 AM
ப.வேலுார், திருமணமான நான்கு நாட்களில் புதுப்பெண் ஓட்டம் பிடித்ததால், விரக்தியடைந்த புது மாப்பிள்ளை துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில், 11வது திருமணம் செய்த மோசடி பெண் மற்றும் ஐந்து புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்துாரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சிவசண்முகம், 36; மினி ஆட்டோ டிரைவர். முதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். மதுரையை சேர்ந்த திருமண புரோக்கர்கள் மூலம், விருதுநகர், ஆலம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமர் மனைவி தீபா என்ற ஜோதி, 23, என்பவரை, கடந்த, 7ல் மதுரை மாட்டுத்தாவணி கோவிலில் சிவசண்முகம் திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்காக, புரோக்கர்களுக்கு கமிஷனாக, ஒரு லட்சம் ரூபாய், மணமகள் தீபாவிற்கு, ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக சிவசண்முகம் கொடுத்துள்ளார்.திருமணம் முடிந்தவுடன், தீபாவை அழைத்துக்கொண்டு சிவசண்முகம் ஜேடர்பாளையம் வடகரையாத்துாரில் உள்ள வீட்டுக்கு சென்றார். பின், கடந்த, 8ல் ராசாம்பாளையத்தில் உள்ள சிவசண்முகத்தின் அக்கா மலர்கொடி வீட்டிற்கு, தம்பதியர் விருந்துக்கு சென்றனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, மனைவி தீபாவை காணவில்லை. திருமணத்திற்கு எடுத்த பட்டுப்புடவை, ஆறு பவுன் தாலிக்கொடியுடன் மோசடியில் ஈடுபட்டது தெரிந்ததும், விரக்தியில் கடந்த, 10ல் சிவசண்முகம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, நல்லுார் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், மணமகளாக நடித்து ஏமாற்றிய தீபா மற்றும் ஐந்து புரோக்கர்களை நல்லுார் போலீசார், நேற்று கைது செய்தனர். விசாரணையில், மதுரையை சேர்ந்த தீபா, ஜவுளி கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதை மறைத்து, மணப்பெண்ணாக பல்வேறு இடங்களில் திருமணம் செய்து ஏமாற்றி வந்துள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த, 'மோசடி' புரோக்கர்களான, பரமத்தி அருகே, திடுமல் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி மனைவி தமிழ்செல்வி, 45, சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி மனைவி கஸ்துாரி பாண்டி, 38, துாத்துக்குடி கோவில்பட்டியை சேர்ந்த வேல்முருகன், 55, சிவகங்கையை சேர்ந்த முத்துலட்சுமி, 45, திருச்சி காமராஜர் மன்ற தெருவை சேர்ந்த நாராயணன், 56, ஆகிய ஐந்து பேர் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தீபா, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திருமணம் செய்துகொண்டு, நான்கு நாட்களில் பணம், நகையை சுருட்டிக்கொண்டு ஓடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் இதுவரை, பத்துக்கு மேற்பட்டோரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. குறிப்பாக, ப.வேலுார் தாலுகாவில் ஏற்கனவே, இரண்டு பேரை திருமணம் செய்து, மூன்றாவதாக சிவசண்முகத்தை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
'இதுபோன்று திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.