/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 05, 2024 11:22 AM
650 கிலோ ரேஷன் அரிசி
கடத்திய இருவர் கைது
ரேஷன் அரிசி கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்.ஐ., கிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ., ஜானகிராமன் உள்ளிட்ட போலீசார் வெண்ணந்துார் அலவாய்பட்டி பிரிவு ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த மாருதி ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 13 மூட்டைகளில், 650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. அலவாய்பட்டியை சேர்ந்த ராஜா, 44, அருண்குமார், 31, என தெரிய வந்தது. இரண்டு பேரையும் போலீசார் கைது
செய்ததுடன் அரிசி, ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்.
குமாரபாளையத்தில்
நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல் மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்தல் குமாரபாளையத்தில் நடந்தது.
தலைமை சங்க பொருளாளர் காந்தி, பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்க தலைவர் நந்தகுமார், செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடந்தது. இதில் ஏகமனதாக மாவட்ட தலைவராக மதிவாணன், செயலாளர் சீனிவாசன், பொருளாளராக கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
குமாரபாளையம் தங்கராஜ், பள்ளிபாளையம் விக்னேஷ் உள்ளிட்ட 13 மாநில செயற்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். குமாரபாளையம் நகர செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் பிரபு மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஊரக வளர்ச்சி துறை
அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரபிரசாத் தலைமை வகித்தார். இதில், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், பிற துறை பணிகளை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட, 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கோவில் உண்டியல்
உடைத்து பணம் திருட்டு
சேந்தமங்கலம் அடுத்த வாழவந்திக்கோம்பை பஞ்., வெண்டாங்கியில், ஜோதி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள் புகுந்து பூட்டை உடைத்து, அங்கிருந்த உண்டியலை திறந்து ரொக்கப்பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் தர்மகர்த்தா தியாகராஜன் அளித்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்செங்கோட்டில்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், அண்ணா சிலை அருகே சங்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழில்துறை அரசாணை எண். 54ன்படி, பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் ஆர்.டி.ஓ., சுகந்தியிடம் மனு கொடுத்தனர்.
வி.சி., கண்டன ஆர்ப்பாட்டம்
லோக்சபா தேர்தலில், ஓட்டுச்சீட்டு முறையே வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலர்கள் நீலவானத்து நிலவன், அர்ஜீனன், முகிலன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலர் பாவேந்தன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
அதில், மின்னணு ஓட்டுப்பதிவு முறையை ரத்து செய்துவிட்டு, ஓட்டுச் சீட்டு முறையை அமல்படுத்தக்கோரி, இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மண்டல துணை செயலர் அரசன், ஒருங்கிணைப்பாளர் பழ.மணிமாறன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
நீலப்பறவையினர் படைகள் துவக்க விழா
ஆவாரங்காடு பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில், சாரண சாரணியர் இயக்கத்தின் பிரிவுகளான குருளையர் மற்றும் நீலப்பறவையினர் படைகள் துவக்க விழா, பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமையில், துணைத் தலைவர் பாலமுருகன் முன்னிலையில் நடந்தது. 48 மாணவ, மாணவிகளுக்கு சாரண சாரணிய இயக்க கழுத்தணியினை அணிவிக்கப்பட்டது.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வம், பள்ளிப்பாளையம் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், சாரண இயக்க மாவட்ட செயலர் விஜய், தலைமை ஆசிரியர் லோகநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ரூ. 5.99 லட்சத்துக்கு
தேங்காய் பருப்பு ஏலம்
தேசிய வேளாண்மை சந்தையில், 5.99 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடந்த ஏலத்தில், 3,168 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 87.71, குறைந்தபட்சமாக, 49.89, சராசரியாக, 77.89- ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் மூன்று லட்சத்து, 16 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
நேற்று நடந்த ஏலத்திற்கு, 8,567 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
அதிகபட்சமாக கிலோ, 88.10, குறைந்தபட்சமாக, 61.19, சராசரியாக, 83.49- ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் ஐந்து லட்சத்து, 99 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
நாமக்கல் தெற்கு அரசு பள்ளியில்
பிளாஸ்டிக் விழிப்புணர்வு கண்காட்சி
நாமக்கல், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் பிளாஸ்டிக் விழிப்
புணர்வு கண்காட்சி நடந்தது.
நமது பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் (பொ) ராமு தலைமை வகித்தார். கண்காட்சியை பார்வையிட வந்த மாணவர்களிடம், பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை, அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து முதுகலை வேதியியல் ஆசிரியர் சுமதி விளக்கினார்.
குறிப்பாக டீக்கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் டீ, காபி வாங்கி குடிக்கக்கூடிய பழக்கம் அதிகரித்து வருவதையும், அதனால் பலவிதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளையும், ஓட்டல்களில் சூடான உணவு பொருள்களை பாலித்தீன் கவர்களில் வாங்கி வரும் போது ஏற்படும் பாதிப்புகளையும் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
நிலுவைத் தொகை
வழங்க கோரி
ஆர்ப்பாட்டம்
நிலுவைத்தொகை வழங்க கோரி, பேராசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மேம்பாடு மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருப்பதை கண்டித்தும், ஊக்க ஊதியம் புத்தொளி மற்றும் புத்தாக்கப்பயிற்சி முடிப்பதற்கான காலநீட்டிப்பு பேராசிரியர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, அனைத்து அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு, மாநிலம் தழுவிய வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஏ.யூ.டி., கிளை சார்பாக கந்தசாமி கண்டர் கல்லுாரி முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்நது. மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ், மண்டல இணை செயலாளர் சரவணன், கிருஷ்ணராஜ் ஆகியோர் பேசினர். 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இணை செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.
மத்திய அரசின் திட்டங்கள்
குறித்து விழிப்புணர்வு
மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் ஏற்படுத்த நாடு முழுவதும் விக்சிட் சங்கல்ப் யாத்திரா வேன் மூலம்
பிரசாரம் ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பா.ஜ., எம்.பி., பொறுப்பில் யாத்திரா வேன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று ராசிபுரம் புதிய பஸ் நிலையம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் உஜ்வாலா திட்டத்தில் காஸ் இணைப்பு வழங்கியுள்ள தனியார் ஏஜென்சி ஆகியவை, பொதுமக்களிடம் திட்டங்கள் குறித்து விளக்கினர். பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் அலாவுதீன், தமிழரசு, ஹரிஹரன், இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பழைய பஸ் நிலையத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி நிதியுதவி வழங்கினர்.
பள்ளிப்பாளையம் அருகே ஆண்டிக்காட்டை சேர்ந்த கலைவாணி, 55, நுாற்பாலை தொழிலாளி. இவர் ஓட்டு வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம், இவரது வீட்டில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் வீட்டின் உள்ளே தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த மக்கள், உடனடியாக உள்ளே சென்று தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்துள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என, தெரிகிறது.
நேற்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ., வுமான
தங்கமணி நேரில் சென்று கலைவாணிக்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார். பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., செயலர் வெள்ளிங்கிரி, நகர பேரவை செயலர் சுப்ரமணி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ராசிபுரத்தில் 278 கிலோ பட்டுக்கூடு ஏலம்
ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 278 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது.
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினமும் இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டு கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 278.3 கிலோ விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ, 420 ரூபாய், குறைந்தபட்சமாக, 300 ரூபாய்க்கு விற்பனையானது. 169.75 கிலோ பட்டுக்கூடு, 1.01 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக கிலோ, 356.50 ரூபாய்க்கு விற்பனையானது.