sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : ஜன 08, 2024 11:50 AM

Google News

ADDED : ஜன 08, 2024 11:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

460 கிலோ புகையிலை

கடத்தல்: 2 பேர் கைது

நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ., செல்லத்துரை மற்றும் போலீசார், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சேலம் சாலை முருகன் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து பஸ் ஸ்டாண்ட் நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரியை நிறுத்துவதற்கு போலீசார் சைகை காட்டினர். ஆனால், டிரைவர் நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

லாரியை விரட்டி சென்ற போலீசார் அவற்றை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து, லாரியை சோதனை செய்ததில், 36 மூட்டைகளில், 460 கிலோ, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது.

லாரியுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை கடத்திய, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கிட்டனஹள்ளியை சேர்ந்த வினோத், 36, அவரது நண்பர் கோவிந்தன், 36, ஆகிய இருவரை கைது செய்தனர். அதில், கோவிந்தன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால், அவரை போலீசார் ஜாமினில் விடுவித்தனர். கைதான வினோத்திடம், தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

பழங்குடியின பெண்களுக்கு

இலவச கணினி பயிற்சி வகுப்பு

கொல்லிமலை பழங்குடியின பெண்களுக்கான, மூன்று மாத கால இலவச கணினி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலையின் கணினி, தகவல் அறிவியல் துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை சார்பில், பழங்குடியின பெண்களுக்கான, மூன்று மாத கால இலவச கணினி பயிற்சி தொடக்க விழா, கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்தது. இந்தியா சியாட்டில் குழு உதவியுடன், பல்கலை துணைவேந்தர் கதிரேசன் வழிகாட்டுதல்படி நடந்த விழாவில், கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர் புவியரசன் பயிற்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது, 'இந்த கணினி பயிற்சி பழங்குடியின பெண்களுக்கு பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதோடு, அவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்குகிறது' என்றார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை, பழங்குடியின கொல்லிமலை திட்ட அலுவலர் பீட்டர் ஞானராஜ், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பாலமுரளிதரன், திட்ட முதன்மை ஆய்வாளர் ஜெயபிரகாஷ், பழங்குடியின நலத்துறை குழு உறுப்பினர் காளியப்பன் மற்றும் டாக்டர்கள் பிரவீணா, சாய்லீலா உள்ளிட்ட அமைப்பு செயலாளர்கள் செய்திருந்தனர்.

இன்று களியனுார் பஞ்.,ல்

ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்

பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட களியனுார் பஞ்., பகுதி பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதில் விவசாயிகள், ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடுகளுக்கு நோய் வராமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இன்று, களியனுார் பகுதியில் பால் சொசைட்டி அருகே ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாம், இன்று நடக்கிறது. முகாமில், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, ஆடுகள் வளர்ப்பு குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆடு வளர்க்கும் விவசாயிகள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, களியனுார் பஞ்., தலைவர் ரவிகுழந்தைவேலு தெரிவித்தார்.

கோவில் மணி திருட

முயன்றவருக்கு 'காப்பு'

குமாரபாளையம் - ஆனங்கூர் சாலையில் ஒட்டன் கோவில் பஸ் ஸ்டாப் உள்ளது. இங்குள்ள ஒரு கோவிலில் வெண்கல மணிகள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன. நேற்று காலை, 5:00 மணியளவில், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கோவில் மணிகளை திருட, கேட்டை தாண்டி உள்ளே குதித்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள், மர்மநபரை வளைத்து பிடித்து குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கோவில் மணிகளை திருட முயன்றவர், கள்ளக்குறிச்சியை சேர்ந்த அந்தோணிராஜ், 40, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

சாலை பணிக்கு

எம்.எல்.ஏ., பூமி பூஜை

மோகனுார் யூனியன், சின்னபெத்தாம்பட்டி பஞ்., மூங்கில்பட்டி துண்டுகாடு தோட்டம் சாலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 13.32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் நவலடி தலைமை வகித்தார். நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் கீதா, முனியப்பன், ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கொல்லிமலை யூனியனில்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

கொல்லிமலை யூனியன், குண்டூர் நாடு, குண்டனி நாடு, அரியூர் நாடு, சித்துார் நாடு, எடப்பள்ளி நாடு, திருப்புளி நாடு, ஆலத்துார் நாடு உள்ளிட்ட பகுதியில் உள்ள பஞ்., அலுவலகங்களில், வருவாய்த்துறை சார்பில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் அப்பன்ராஜ், அட்மா குழு தலைவர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முகாமை துவக்கி, கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். 'இந்த மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மக்கள் அனைவரும் இத்திட்ட முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

பழங்குடியினர் திட்ட அலுவலர் பீட்டர், பி.டி.ஓ., சரவணன், தனபால், பஞ்., தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

வரி செலுத்தாமல் இயக்கிய 3 வாகனம் பறிமுதல்

வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய சோதனையில், வரி செலுத்தாமல் இயக்கிய, மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் வடக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் வாகன சட்டத்திற்கு முரணாக இயக்கிய, 33 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அதில், வாகன விதிமீறி அதிக பாரம் ஏற்றியதற்காகவும், அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றி சென்றதற்காகவும், வாகனத்தின் காப்பு சான்று புதுப்பிக்கப்படாமலும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் சென்றதற்காகவும், 11 வாகனங்களுக்கு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

மேலும், சோதனையின் மூலம், 79,450 ரூபாய் வரியும், 18,500 ரூபாய் இணக்க கட்டணமும் வசூல் செய்யப்பட்டது. அதேபோல், இணக்க கட்டணம், இரண்டு லட்சத்து, 29,800 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. வாகனத்திற்கு வரி செலுத்தாமல் இயக்கிய குற்றத்திற்காக, மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாயன்மார்களுக்கு பூச்சொரிதல் விழா

திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில், 63 நாயன்மார்களுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. இதில், கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் சிறப்பு யாக பூஜை செய்யப்பட்டு, 63 நாயன்மார்களுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சிவவாத்தியங்கள் முழங்க, நான்குரத வீதிகளிலும் வலம் வந்து, கைலாசநாதருக்கு பூச்சொரிதல் செய்யப்பட்டது. உமாமகேஸ்வரர், சுகந்தகுந்தலாம்பிகை, மாதுபட்டி முருகன் சிறப்பு அலங்காரத்தில் முன் செல்ல, 63 நாயன்மார்கள் பஞ்சவாத்தியங்கள் முழங்க திருவீதி உலா வந்தனர். யாக பூஜை, அபிஷேக நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மாநில அளவில்

கராத்தே போட்டி

ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாநில அளவிலான கராத்தே போட்டி, நேற்று நடந்தது.

வநேத்ரா முத்தாயம்மாள் கல்லுாரி செயலாளர் முத்துவேல் ராமசுவாமி, ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா ஆகியோர், போட்டியை துவக்கி

வைத்தனர். இதில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிரிவு, 5 முதல், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரை திறந்தவெளி மற்றும் தனி திறமையை வெளிப்படுத்தும் வகையில் கராத்தே போட்டி நடந்தது.

போட்டியில், சேலம், கரூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 2,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

முப்பெரும் விழா விழிப்புணர்வு

மாரத்தானில் 5,000 பேர் பங்கேற்பு

நாமக்கல்லில், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணனின், 104வது பிறந்தநாள் விழா, நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்கத்தின், 51வது ஆண்டு துவக்க விழா, நாமக்கல் மாரத்தான்-2024 என முப்பெரும் விழா, விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, நாமக்கல் - பரமத்தி சாலை, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில், நேற்று நடந்தது. கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். டி.எம்.காளியண்ணன் பவுண்டேசன் நிறுவன தலைவர் செந்தில் வரவேற்றார். மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில், போதைப்பொருள் இல்லாத, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இல்லா சமுதாயம் வேண்டும் என்பதை வலியுறுத்தி, 5,000க்கும் மேற்பட்டோர் மாரத்தானில் ஓடினர். மாரத்தானில் முதலிடம் பிடித்தவர்களுக்கு, சேலம் டி.ஐ.ஜி., ராஜேஸ்வரி, 5,000 ரூபாய் பரிசு வழங்கினார். தொடர்ந்து, ரத்த தான முகாம் நடந்தது.

காங்., மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, எம்.பி., சின்ராஜ், கொங்கு நாட்டு வேளாளர் சங்க பொருளாளர் அருட்செல்வி, செயலாளர் சீனிவாசன், அமெரிக்காவை சேர்ந்த சிவில் கான்ட்ராக்டர் குமாரசாமி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போதைப்பொருள் விழிப்புணர்வு

தி.கோட்டில் 'மினி மாரத்தான்'

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனம் மற்றும் போலீசார் இணைந்து, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மினி மாரத்தான் போட்டி நடத்தின. இதில், 10 கி.மீ., துார மாரத்தான் போட்டி, திருச்செங்கோடு புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கியது. நாமக்கல் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ்கண்ணன், எம்.பி., சின்ராஜ், கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன், கல்வி நிறுவன முதன்மை நிர்வாகி அகிலாமுத்துராமலிங்கம் ஆகியோர், கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தலைவர் சச்சின்சிவா, நடிகர் சந்தோஷ்பிரதாப் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசு, சான்றிதழ் வழங்கினர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி

மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழக ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் அருள்மணி, இளைஞரணி செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனியப்பன் தீர்மானங்கள் குறித்தும், மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி கோரிக்கை பற்றியும் விளக்கினர்.

கூட்டத்தில், தமிழக தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை, கடுமையாக பாதிக்கும், 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும். பள்ளிகளை துாய்மைப்படுத்த, பஞ்., துப்புரவு பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அரசாணை, 243ஐ ரத்து செய்யக்கோரி, தமிழகம் முழுவதும், வரும், 11ல், 'டிட்டோஜாக்' நடத்தும் ஆர்ப்பாட்டத்தில், தமிழக ஆசிரியர் கூட்டணியினர் பெருந்திரளாக கலந்துகொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொங்கல் பரிசுக்கு 'டோக்கன்'

வழங்கும் பணி தொடக்கம்

தமிழக அரசின் பொங்கல் பரிசு, தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு, வரும், 10 முதல் வழங்கப்பட உள்ளது. வருமானவரி செலுத்துபவர்கள், பொருளில்லாத குடும்ப அட்டை, மத்திய, மாநில, பொதுப்பணித்துறை ஊழியர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இதற்காக தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு முன் கூட்டியே டோக்கன் வழங்கும் பணி, நேற்று தொடங்கியது. ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று பொது இடங்களில் வைத்து டோக்கனை வழங்கி வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் டோக்கனை பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பரிசு வழங்கும் தேதி, நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்கப்படுகிறது. ராசிபுரம் தாலுகாவில் உள்ள, 192 ரேஷன் கடைகளிலும் இப்பணி, நேற்று காலை, 9:00 மணி முதல் தொடங்கியது. ஒவ்வொரு கடைகளிலும், 10 முதல், 15 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்கவில்லை. மற்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இரண்டு தினங்களில், 'டோக்கன்' முழுவதும் வினியோகிக்கப்பட உள்ளது.

கட்டுவிரியன் பாம்பு மீட்பு பள்ளிப்பாளையம் அடுத்த ஒட்டமெத்தை பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை, பள்ளி வளாகத்தில் பலர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதிக விஷம் கொண்ட, 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு, கலையரங்கத்தின் கீழே பதுங்கியது. இதுகுறித்து, நகராட்சி பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாம்பு பிடிக்கும் வாலிபரை வரவழைத்து, உயிருடன் கட்டுவிரியன் பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாலமுருகன் கோவிலில்

திருவிளக்கு வழிபாடு

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கிருந்து ஆண்டுதோறும் முருக பக்தர்கள் அறுபடை யாத்திரை செல்வது வழக்கம். முன்னதாக தீர்த்தக்குட ஊர்வலம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடுகள், யாக சாலை பூஜை, அன்னதானம் நடப்பது வழக்கம். 59ம் ஆண்டு அறுபடைவீடு யாத்திரையையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து, மேளதாளம் முழங்க தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன.

தொடர்ந்து, சக்தி விநாயகர், பாலமுருகன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டு, உலக நன்மை வேண்டி யாக வழிபாடு கோவில் வளாகத்தில் நடந்தது. நேற்று, திருவிளக்கு பூஜை நடந்தது.

20 சதவீதம் போனஸ் கேட்டு

தெருமுனை பிரசார கூட்டம்

குமாரபாளையத்தில், சி.ஐ.டி.யூ., சார்பில், 20 சதவீதம் போனஸ் கேட்டு நகரம் முழுதும் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் போனஸ் வழங்க அரசு சார்பில் அரசானை இட்டு உத்திரவாதம் செய்கிறது. ஆனால், விசைத்தறி தொழிலாளர்களுக்கு இதுவரை போனஸ் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட சிறப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, 20 சதவீதம் போனஸ் கேட்பது என முடிவு செய்து, நேற்று நகரம் முழுதும் தெருமுனை பிரசாரம் நடத்தப்பட்டது. பொங்கலுக்கு, 15 நாட்களுக்கு முன்பே போனஸ் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலர் அசோகன், தலைவர் மோகன், நகர செயலர் பாலுசாமி, நகர பொருளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

மா.கம்யூ.,

டூவீலர் பிரசாரம்

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., மோளிப்பள்ளி ராமசாமி, காவிரி உபரிநீரை மேட்டூரில் இருந்து செத்தமலை வழியாக கால்வாய் அமைத்து, திருமணிமுத்தாற்றில் இணைக்க வேண்டும் என, 1989ல் சட்டசபையில் வலியுறுத்தினார். இந்த திட்டத்தை செயல்படுத்தினால், திருமணிமுத்தாற்றை ஒட்டியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, அரசு விரைந்து இந்த திட்டத்தை கையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று, மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட, ராமாபுரம் பஸ் ஸ்டாப்பில் தொடங்கி, கருங்கல்பட்டி, மரப்பரை, வையப்பமலை, பெரியமணலி, கோக்கலை, எலச்சிபாளையம் வழியாக, டூவீலர் பிரசாரம் மேற்கொண்டனர். ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், தேவராஜ் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, சுரேஷ் உள்பட பலர்கலந்துகொண்டனர்.

நாமக்கல் அருகே சாலை விபத்துதொழிலாளி உள்பட 2 பேர் பலி

நாமக்கல் அருகே கார் மோதியதில், இரண்டு பேர் பலியாகினர்.

நாமக்கல் மாவட்டம் திண்டமங்கலம் அருகே பெரிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுப்ரமணியம் மனைவி சாந்திபிரியா, 40; சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 'ஐ20' காரில் நேற்று மதியம், ௩:௦௦ மணிக்கு சென்றார். கருங்கல்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள அரளி செடிகளுக்கு மத்தியில் புகுந்து, கரையாம்புதுாரை சேர்ந்த லாரி பாடி கட்டும் கூலி தொழிலாளி செந்தில், 40, சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதுவதை தவிர்க்க, சாந்திபிரியா திடீரேன பிரேக் போட்டார். ஆனாலும் கார் செந்தில் மீது மோதியது. அதேசமயம் காரில் இருந்த 'ஏர்பேக்' திறந்து, சாந்திபிரியாவின் முகத்தை மறைத்துள்ளது.

இதனால் கார் அவர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் நிலை தடுமாறி விழ, அதற்குள் அமர்ந்திருந்த டிரைவரான புதுச்சத்திரம் அடுத்த நவணியை சேர்ந்த டிரைவர் துரைசாமி, 60, விழ, ஆட்டோ அவரை அமுக்கியது.

படுகாயமடைந்த செந்தில், துரைசாமி இருவரும், நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், இருவரும் இறந்து விட்டனர். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

உடல் நலம் பாதித்த 40,061 பேர்

'108' ஆம்புலன்ஸ் மூலம் மீட்பு

நாமக்கல், ஜன. 8-

'கடந்த, 2023ல் உடல் நலன் பாதிக்கப்பட்ட, 40,061 பேரை, '108' அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டுள்ளது' என, '108' ஆம்புலன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் கட்டுப்பாட்டில், தனியார் நிறுவன மேற்பார்வையில் செயல்படும், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில், 5,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். விபத்து, தற்கொலை முயற்சி, எதிர்பாராத நிகழ்வுகள், அவசர கால மருத்துவ உதவிக்கு இந்த ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, 2023ல் மட்டும் பல்வேறு வகைகளில் உடல் நலன் பாதிக்கப்பட்ட, 40,061 பேரை மீட்டு சென்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதன் டிரைவர்களும், மருத்துவ உதவியாளர்களும் சேர்த்துள்ளனர்.

இதேபோல், சேலம் மாவட்டத்தில், 82,034 பேரும், ஈரோடு மாவட்டத்தில், 59,270 பேரும், '108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us