/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 09, 2024 11:08 AM
பவித்திரம் ஆட்டுச்சந்தையில்
ரூ.35 லட்சத்திற்கு வர்த்தகம்
எருமப்பட்டி அருகே, பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இங்கு முட்டாஞ்செட்டி, நவலடிப்பட்டி, செல்லியாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதேபோல், இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், நேற்று பவித்திரத்தில் நடந்த வாரச்சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால், வரத்து அதிகரித்து, 35 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
171 கிலோ பட்டுக்கூடு
ரூ.67,000க்கு விற்பனை
ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 171.6 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 440 ரூபாய், குறைந்தபட்சம், 291 ரூபாய், சராசரியாக, 395.23 ரூபாய் என, 171.6 கிலோ பட்டுக்கூடு, 67,000 ரூபாய்க்கு விற்பனையானது.
நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை குறித்து பயிற்சி
வரும், 11ல் நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் நடக்கிறது என, நாமக்கல் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம், கோழிகளுக்கான மரபுசார் மூலிகை பேராசிரியர், தலைவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், பண்ணையாளர்களுக்கு 'நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு' குறித்து ஒருநாள் பயிற்சி வகுப்பு வரும், 11 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. விபரங்களுக்கு, 04286 2332230 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
பாண்டமங்கலம் பெருமாள்
கோவிலில் 11ல் கொடியேற்றம்
பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, வரும், 11 காலை, 11:30 மணிக்கு கொடியேற்று விழா, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் நடக்கிறது. அலமேலு மங்கா, கோதநாயகி சமேத, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமிக்கு ஆண்டுதோறும், தை மாதம் திருவிழா நடத்துவது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு வரும், 19ல் திருவிழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, அன்று மாலை, 4:30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்று விழா மற்றும் திருத்தேர் விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், ஆய்வாளர் ஜனனி, தக்கார் வினோதினி மற்றும் திருத்தேர் திருவிழா குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கெட்டுப்போன இறைச்சி
ஓட்டலுக்கு அபராதம்
பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள், நேற்று, பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அக்ரஹாரம் பகுதியில் செயல்பட்டு வந்த, இரண்டு ஓட்டலில் கெட்டுப்போன பழைய இறைச்சி, மற்றும் பரோட்டாக்களை பிரிட்ஜில் வைத்து, சூடுபடுத்தி விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்த, 10 கிலோ இறைச்சி, பரோட்டாவை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும், இரண்டு ஓட்டலுக்கும், தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பாலம் கட்டுமான
தடுப்பில் பாய்ந்த கார்
குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு, எஸ்.எஸ்.எம்., கல்லுாரி வரையிலான பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி, இரண்டு மாதமாக நடந்து வருகிறது. இதற்காக, கத்தேரி பிரிவு, எஸ்.எஸ்.எம்., கல்லுாரி ஆகிய இடங்களில் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு, பணி நடக்கும் இடத்தில் மண் குவியல் கொட்டப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, 2:00 மணியளவில் வேகமாக வந்த கார் ஒன்று, இந்த தடுப்பின் மீது மோதி, மண் குவியலில் பாய்ந்து நின்றது. குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் மாயம்: தந்தை புகார்
பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த ஏமப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி, 34; டிரைவர். இவர் கடந்த, 4ல் கொக்கராயன்பேட்டை பகுதியில் நடக்கும் திருவிழாவிற்கு செல்வதாக கூறிவிட்டு, டூவீலரில் சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு சென்றார் என, தெரியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், நேற்று இவரது தந்தை ராஜி, காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரவேண்டும் என, மொளசி போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
'டோக்கன்' வினியோகம்
குவிந்த மக்களால் பரபரப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பொருட்களுடன், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல், வீடு வீடாக சென்று, 'டோக்கன்' வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் வைத்தும், பொது இடங்களில் வைத்தும் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம், 'டோக்கன்' வழங்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல், நேற்று ரெட்டிப்பட்டி பஞ்., கூலிப்பட்டியில் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் பஸ் ஸ்டாப் அருகே மழையையும் பொருட்படுத்தாமல், அனைவரைம் வரவைத்து டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. இந்த, 'டோக்கன்'களை பெற ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மளிகை கடையில்
ரூ.20,000 திருட்டு
சேந்தமங்கலம் அடுத்த வாழவந்திக்கோம்பை பஞ்., வெண்டாங்கி பஸ் ஸ்டாண்ட் அருகே கிருபாகரன், 39, என்பவர் கடந்த, 15 ஆண்டுகளாக மளிகை, டீ கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். காலை, 5:00 மணிக்கு, கிருபாகரன், இவரது மனைவி மாரியம்மாள் ஆகிய இருவரும் கடையை திறக்க வந்தனர். அப்போது, கடையில் இருந்த மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, 20,000 ரூபாய் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக்தி அம்மன் கோவில் திருவிழா
மோகனுார் யூனியன், ராசிபாளையம் பஞ்., இந்திரா நகரில், சக்தி விநாயகர், சக்தி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், மார்கழி மாத திருவிழா, மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம், காவிரி ஆற்றில் இருந்து வேல் மற்றும் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவிலை அடைந்தது.
தொடர்ந்து, மூலவர் முன் வைக்கப்பட்டு, விநாயகர், மூலவர் சக்தியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, தீபாராதனை நடந்தது. நேற்று, மாவிளக்கு பூஜையும், மூலவர் சக்தி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
இ.கம்யூ.,
ஆர்ப்பாட்டம்
மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். மாநில அரசு கோரியுள்ள நிதியை, மத்திய அரசு முழுமையாக, உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில், பள்ளிப்பாளையம் பிரிவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கரும்பு அறுவடை துவக்கம்
பள்ளிப்பாளையம் அருகே, சமயசங்கிலி சுற்றுவட்டார பகுதியில் பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில், ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்தாண்டு எதிர்பார்த்தளவு மழை பெய்துள்ளதால், கரும்பு சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைத்து, நல்ல வளர்ச்சி பெற்று தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. சுமயசங்கிலி பகுதி கரும்புக்கு தனி சுவை என்பதால், மக்களிடமும், வியாபாரிகளிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.
இதனால், நாமக்கல், ஈரோடு, சேலம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக இப்பகுதிக்கு வந்து கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ளதால், நேற்று முதல் கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.
எங்களுக்காக ஒதுக்கிய இடத்தில்
ஆக்கிரமிப்பு: அகற்றக் கோரி மனு
எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, சேளூர் செல்லப்பம்பாளையம் பகுதி மக்கள், கலெக்டரிடம் மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ப.வேலுார் தாலுகா, சேளூர் செல்லப்பம்பாளையம் அருந்தியர் தெருவில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த, 1980ல் எங்களுக்கு இலவச நிலம் வழங்க, அரசு சார்பில், ஐந்து ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது, அந்த நிலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை வசம் உள்ளது. இதுவரை எங்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கீடு செய்து, பட்டா கொடுக்கவில்லை.
இந்நிலையில், எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, வேறு சில நபர்கள் கிரயம் செய்து, ஆவணங்களை அவர்களின் பெயருக்கு மாற்றியுள்ளனர். எனவே, அந்த இடத்தில் உள்ள அக்கிரமிப்புகளை அகற்றி, இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
முத்தாயம்மாள் பாலிடெக்னிக்கில்
வரும் 21ல் இலவச 'நீட்' மாதிரி தேர்வு
ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் வரும், 21ல் இலவச, 'நீட்' மாதிரி தேர்வு நடக்கிறது என, கல்லுாரி தலைவர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை, 40 ஆண்டுகளாக கல்விச்சேவையை சிறப்பாக செய்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, முத்தாயம்மாள் அகாடமி மூலம் மருத்துவ படிப்புக்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவியருக்கு, இலவச, 'நீட்' மாதிரி தேர்வை நடத்துகின்றனர். வரும், 21ல் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் இந்த தேர்வு நடக்கிறது. இதில், 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுபவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும், தேர்வில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், 28ம் தேதி சிறப்பு வகுப்பு நடக்கிறது. இதில், 'நீட்' பயிற்சியாளர்கள், மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கின்றனர். மேலும், தேர்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்தும் பேச உள்ளனர். விபரங்களுக்கு, 9976340993, 96777 70837 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.