sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : ஜன 15, 2024 10:40 AM

Google News

ADDED : ஜன 15, 2024 10:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, பானை விற்பனை ஜோர்

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கரும்பு, மண் பானை, மஞ்சள் கொத்து, கோலப்பொடி உள்ளிட்டவைகளின் விற்பனை ஜோராக நடந்தது.

போகி பண்டிகையையொட்டி, நாமக்கல்லில் நேற்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை கழித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்த பெண்கள் ஆவாரம்பூ, பூலாப்பூ மற்றும் வேப்பிலையை கொண்டு காப்பு கட்டி பொங்கல் பண்டிகையை துவங்கினர். இன்று வாசல் பொங்கல் வைத்து சூரியனை வழிபட

உள்ளனர். இதற்காக கரும்புகளை வாசலில் நிறுத்தி வைக்க, மும்முரமாக வாங்கி சென்றனர்.

நாமக்கல் நகரை பொறுத்தவரை, ஈரோடு, கொடுமுடி, கருங்கல்பாளையம், காரவள்ளி பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்ட கரும்புகள் ஆங்காங்கே சாலையோரங்களிலும், உழவர் சந்தை பகுதி, வாரச்சந்தை பகுதியிலும் கட்டு, கட்டாக விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன. இந்தாண்டு ஒருஜோடி கரும்பு, 80 முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், விலையை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இதேபோல், பொங்கல் பானை விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது. மண்பானையின் தரத்தை பொறுத்து, 100 ரூபாயில் இருந்து, 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

மண் அடுப்பு, 200 ரூபாய்க்கும், மஞ்சள் குலை ஒரு ஜோடி, 50 முதல், 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்பொடி விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.

ரூ.12.77 லட்சத்துக்கு

காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல்: நாமக்கல் கோட்டை சாலையில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினசரி காலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை அறுவடை செய்து, நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

வழக்கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச்செல்வது வழக்கம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 205 விவசாயிகள், 27,395 கிலோ காய்கறிகள், 5,415 கிலோ பழங்கள், 45 கிலோ பூக்கள் என, மொத்தம், 34,515 கிலோ காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவற்றை, 6,900 பொதுமக்கள் சந்தைக்கு வந்து, தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி சென்றனர்.

ஒரே நாளில், 12 லட்சத்து, 77,215 ரூபாய் அளவுக்கு விற்பனையானது. தக்காளி ஒரு கிலோ, 32 ரூபாய், கத்தரி, 80 ரூபாய், வெண்டை, 56 ரூபாய், புடலங்காய், 36 ரூபாய், பீர்க்கங்காய், 60 ரூபாய், சின்ன வெங்காயம், 35 ரூபாய், பெரிய வெங்காயம், 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

முத்தாயம்மாள் இன்ஜி., கல்லுாரியில்

பொங்கல் விழா கொண்டாட்டம்

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லுாரி மற்றும் முத்தாயம்மாள் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சார்பில், கல்லுாரி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான, உறியடித்தல், ரங்கோலி, கயிறு இழுத்தல், லக்கி கார்னர் மற்றும் கட்டுரை, ஓவியம், கவிதை ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், பேராசிரியர்களுக்கு கல்லுாரி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், கல்லுாரி சார்பில் விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். ராசிபுரம் முத்தாயம்மாள் எஜிகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் தாளாளர்

கந்தசாமி, செயலாளர் குணசேகரன், டிரஸ்டி அம்மணி, இணை செயலாளர் ராகுல், உறுப்பினர்கள் உமாராணி, காவ்யா ஆகியோர் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர்கள் மாதேஸ்வரன், வேணுகோபால், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக மற்றும் ஆய்வக பணியாளர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நாட்டுக்கோழி விலை உயர்வு

ப.வேலுார் சுற்று வட்டார பகுதியில், நாட்டுக்கோழிகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். நேற்று கூடிய சந்தையில், பரமத்தி, ப.வேலுார், மோகனுார், நாமக்கல், திருச்செங்கோடு, சோழசிராமணி, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்கோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அசைவ பிரியர்கள் அதிகளவு நாட்டுக்கோழியை வாங்கிச் சென்றனர். கடந்த வாரம், நாட்டுக்கோழி கிலோ, 350 ரூபாய்க்கு விற்றது நேற்று, 500 ரூபாய்க்கு விற்பனையானது.

ரேக்ளா போட்டி

பொங்கல் பண்டிகையையொட்டி, நாமகிரிப்பேட்டையில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் ரேக்ளா போட்டி நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பல்வேறு காரணங்களால் ரேக்ளா போட்டி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு ஸ்ரீ மாரியம்மன் நண்பர்கள் குழு சார்பில் ரேக்ளா போட்டி நடத்தப்படுகிறது. நாமகிரிப்பேட்டையில் இருந்து மெட்டாலா வரை போட்டி நடக்கிறது. பெரிய குதிரை போட்டியில் வெற்றி பெற்றால், 20,000 ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை, சிறிய குதிரை வெற்றி பெற்றால், 17,000 ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

இதேபோல், அடுத்து வரும் இரண்டு குதிரைகளுக்கும் ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

டூவீலர்கள் திருட்டுகுமாரபாளையம், கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், 24; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில் தன் வீட்டு முன், 'யமஹா' டூவீலரை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை.

இதேபோல், அதே பகுதியை சேர்ந்தவர் கவின்ராஜ், 20; இவர், தனியார் கல்லுாரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த நவ., 11ல் தனது, 'ராயல் என்பீல்டு' புல்லட்டை கல்லுாரி முன் நிறுத்தியிருந்தார். மாலை வகுப்பு முடிந்து வந்து பார்த்தபோது, புல்லட்டை காணவில்லை. இந்த, இரண்டு புகார்கள் குறித்தும், குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி

நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணி முதல், கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

குறிப்பாக, நாமக்கல் நகரில், திருச்சி, துறையூர், மோகனுார், பரமத்தி, திருச்செங்கோடு சாலைகளில் உபனிப்பொழிவு காணப்பட்டது. முன்னாள் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு மூடுபனி காரணமாக, விபத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து வாகனங்களும், முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன.

மேலும், சாலையை மறைக்கும் அளவுக்கு மூடுபனி காணப்பட்டதுடன், கடும் குளிர் வாட்டி வதைத்ததால், நடைபயிற்சிக்கு செல்வோர், பணிக்கு சென்றவர்கள், உழவர் சந்தை, வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க சென்றவர்கள் சிரமத்துக்குள்ளாகினர். இந்த பனிப்பொழிவு, நேற்று காலை, 9:00 மணி வரை நீடித்தது.

அதேபோல், மோகனுார் பகுதியில், பஸ் ஸ்டாண்ட், காட்டுப்புத்துார் சாலை, நாமக்கல் சாலை, பரமத்தி சாலை, வாங்கல் காவிரி பாலம் உள்ளிட்ட பகுதிகளில், பனிப்பொழிவு அதிகளவில் காணப்பட்டது.

விசைத்தறி கூடத்திற்கு

10 நாள் விடுமுறை

பள்ளிப்பாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். பொங்கலுக்கு, 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி

கூறியதாவது:

வழக்கமாக பண்டிகை காலத்தில் ஒரு வாரம் விடுமுறை அளிப்பது வழக்கம். தற்போது, ஏராளமான தொழிலாளர்கள் பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். அவர்கள் திரும்பி வருவதற்கு, ஒரு வாரமாகிவிடும். அதனால், பொங்கல் பண்டிகையையொட்டி, விசைத்தறி கூடத்திற்கு, 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் விஸ்வகர்மா

திட்டத்திற்கு ஆன்லைன் பதிவு

ராசிபுரம் அடுத்த பட்டணத்தில் மத்திய அரசின், 'விஸ்வகர்மா' திட்டத்திற்கு ஆன்லைன் பதிவு செய்யப்பட்டது.

மத்திய அரசு, 'விஸ்வகர்மா' திட்டத்தில் பதிவு செய்யும் கைத்தொழில் கலைஞர்களுக்கு மானிய கடன் வழங்குகிறது. அதுமட்டுமின்றி தொழில் தொடங்கவும் நிதி வழங்குகிறது. இதற்கு ஆன்லைனில் பதிவு செய்வது அவசியம். நாமக்கல் மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் ஒவ்வொரு கிராமமாக சென்று, இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி ஆன்லைனில் பதிவு செய்யவும் வசதி செய்து தருகின்றனர். நேற்று ராசிபுரம் அடுத்த பட்டணத்தில் இதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் கலந்துகொண்டு பதிவு செய்து சென்றனர். சிபில் மதிப்பெண், 700க்கும் மேல் உள்ளவர்கள் தான் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும் என, பா.ஜ., நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சீராப்பள்ளி பக்தர்கள்

இன்று யாத்திரை துவக்கம்

பழநியில் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் முருகன் பக்தர்கள் நடைபயணமாக செல்கின்றனர். நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, ஒடுவன்குறிச்சி, வெள்ளக்கல்பட்டி சுற்றுவட்டார பகுதியில் மட்டும், 10க்கும் மேற்பட்ட குழுவினர், 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழநிக்கு தங்களது பாதயாத்திரையை, நேற்று தொடங்கினர்.

சீராப்பள்ளி பாலமுருகன் பாதயாத்திரை குழுவினர், 48வது ஆண்டாக இந்தாண்டு பாதயாத்திரை செல்கின்றனர். வெள்ளக்கல்பட்டி பாலமுருகன் பாதயாத்திரை குழுவினர், 35வது ஆண்டாக செல்கின்றனர். அதேபோல், சீராப்பள்ளி, ஒடுவன்குறிச்சியில் சமயபுரத்திற்கு ஆன்மிக குழுக்கள் பாதயாத்திரை இன்று புறப்படுகின்றனர். நாமகிரிப்பேட்டையில் இருந்து, 2 குழுக்கள் நேற்றிரவு பாதயாத்திரை புறப்பட்டனர். முன்னதாக மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பா.ஜ., சாதனை விளக்க

ரத யாத்திரை வருகை

பா.ஜ., சாதனை விளக்க ரத யாத்திரை, குமாரபாளையம் நகருக்கு வந்தது. இதில், பா.ஜ., அரசின் சாதனைகள், திரைப்படமாக காண்பிக்கப்பட்டது.

பழங்குடியின சமூகத்தினருக்கு மரியாதை, உரிமை, வாய்ப்பு, ஏழைகளுக்கு அடிப்படை கட்டமைப்பு உருவாக்கம், மகளிருக்கு அதிகாரமளித்தல், விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு

உத்தரவாதம், ஆயுஷ்மான் பாரத் எனும் மக்கள் ஆரோக்கிய திட்டம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சீரமைப்பு,

புத்தொழில் இந்தியா, வந்தே பாரத் என்பன போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து, விளக்கவுரை படமாகவும், வாய்மொழி மூலமாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

பா.ஜ., அரசின் சாதனைகள் குறித்து நாட்காட்டி, துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

சந்தன கட்டை கடத்திய

பர்கூர் தம்பதி சிக்கினர்

திருப்பத்துார் அருகே, ஆட்டோவில் சந்தன கட்டை கடத்திய, பர்கூர் தம்பதி உள்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துாரை அடுத்த வெங்களாபுரம் அருகே, திருப்பத்துார் தாலுகா போலீசார், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு ஆட்டோவில் பைகளுடன் மூன்று பேர் வந்தனர். பைகளை சோதனை செய்ததில், 10 கிலோ சந்தன கட்டை இருந்தது. மூவரையும் விசாரித்ததில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த ஒப்பந்தவாரி காளியப்பன், 55, அவர் மனைவி பாப்பா, 45, அவர்களது உறவினர் மாணிக்கம், 42, என தெரிந்தது.

பெங்களூருவில் இருந்து திருப்பத்துாரில் ஒருவருக்கு விற்பனை செய்ய, கொண்டு சென்றது தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 கிலோ சந்தன கட்டையை பறிமுதல் செய்தனர்.

தாய் இறந்த துக்கத்தில் மகன்

ரயிலில் பாய்ந்து தற்கொலை

நாமக்கல் அடுத்த காதப்பள்ளி, மட்டபாறை புதுாரை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி சாலினிதேவி, 48. தம்பதியருக்கு, டயா விஷ்ணு, 23, என்ற மகன் இருந்தார். கருத்துவேறுபாடால், கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சாலினிதேவியும், அவரது மகனும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். டயாவிஷ்ணு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, தாயாரின் சொல்லை கேட்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சாலினிதேவி, நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, வீட்டில்

துாக்குப்போட்டு கொண்டார்.

இதையறிந்த அக்கம் பக்கத்தினர், சாலினிதேவியை மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, டயா விஷ்ணு, அவருடன் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று, காலை, 9:50 மணிக்கு, சாலினிதேவி உயிரிழந்தார்.

இதனால் துக்கம் தாங்காத டயாவிஷ்ணு, நாமக்கல் - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலம் அருகே, ரயில் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். சாலினிதேவி இறந்த சம்பவத்தை, நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

11 வயது சிறுவன் கொலை

கரூர் அருகே சித்தப்பா கைது

கரூர் அருகே சிறுவன் அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார். ஆவேச சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புகழூர் ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் பாரதி, 11; கரூர் வெண்ணைமலையில் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் பண்டிகைக்கு பள்ளி விடுமுறை என்பதால், செம்படாம்பாளையம் செந்துார் நகரில் உள்ள, தாத்தா பொன்னுசாமி வீட்டுக்கு, சிறுவன் பாரதி நேற்று முன்தினம் சென்றார். வீட்டில் பாரதியும், அவரது சித்தப்பா மோகன்ராஜ், 40, நேற்றிரவு இருந்தனர்.

அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் சிறுவன் பாரதி, மோகன்ராஜை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், பாரதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.

தகவலறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் விரைந்து சென்றனர். சிறுவன் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை,

சித்தப்பாவே வெட்டி கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில், பலத்த அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது.

சவுண்டம்மன் கோவில் திருவிழா

கத்திபோட்டு ஆடி வந்த வீரகுமாரர்கள்

குமாரபாளையம், சேலம் சாலையில் சவுண்டம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 8ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது.

நேற்று, திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைப்பு வைபவம் நடந்தது. வீரகுமாரர்கள், கத்தி போட்டவாறு, அம்மனை தண்டகம் பாடி அழைத்து வந்தனர்.

வீரகுமாரர்கள் வீரமுண்டியை எதிர்த்து போராடுவது, வயிற்றின் மீது வாழைக்காய் வைத்து, கத்தியால் துண்டிப்பது ஆகிய நிகழ்வுகள், பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

இன்று காலை சாமுண்டி அழைப்பு வைபவம், மாலையில் பெரிய பொங்கல் விழா நடக்கிறது. நாளை இரவு, மகா ஜோதி திருவீதி உலா, 17 காலை மஞ்சள் நீராட்டு திருவீதி உலா, மாலையில் அலங்கார ரதத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us