/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்.. நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்.. நாமக்கல்
ADDED : ஜன 22, 2024 12:24 PM
சேந்தமங்கலத்தில் கும்பாபிஷேக விழா
சேந்தமங்கலம், செல்லியம்மன்பாளையம், போயர் தெருவில் பிரசித்தி பெற்ற பாளையத்தம்மன், வாழவந்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. புதிதாக ஆலயம், கோபுரங்கள் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, நேற்று, கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், மகாலட்சுமி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, லட்சுமி, சரஸ்வதி, திரவியங்கள் ஹோமம், தீபாராதனை நடந்தது. பாளையத்தம்மன், வாழவந்தி மாரியம்மன் சுவாமிக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. பாளையத்தம்மன், வாழவந்தி மாரியம்மன் சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குறுகலான துாசூர் பாலம் விரிவுபடுத்த கோரிக்கை
துாசூர் ஏரி அருகே, குறுகலான பாலத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால், பாலத்தை விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் - துறையூர் சாலையில் துாசூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து வழிந்து செல்லும் தண்ணீர், துறையூர் மெயின் ரோட்டை கடந்து செல்லும் வகையில், கடந்த, 50 ஆண்டுக்கு முன் சாலையின் குறுக்கே பொதுப்பணித்துறை சார்பில் பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தில் தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், பாலம் மிகவும் குறுகலாக உள்ளதால், அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் இந்த பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை பகுதியில்
வெங்காய அறுவடை தீவிரம்
நாமகிரிப்பேட்டை பகுதியில் வெங்காய அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், 1,500 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அறுவடை சீசன் தொடங்கிவிட்டதால் இப்பகுதியில் வெங்காய அறுவடை நடந்து வருகிறது. மழை காலத்தில் காய் பிடிப்பு நன்றாக இருந்ததால், தற்போது விளைச்சல் கூடுதலாக உள்ளது. இதனால் வெங்காயம் விலை, விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு உயரவில்லை. கிலோ, 25 ரூபாய்க்கு வயல்களிலேயே வந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். மெட்டாலா உழவர் சந்தைக்கு சென்றால், அதிகபட்சமாக கிலோ, 30 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
நாமகிரிப்பேட்டை யூனியன், வெள்ளக்கல்பட்டி, மெட்டாலா, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறுவடை தொடங்கியதால், மெட்டாலா காய்கறி மார்க்கெட்டிற்கு வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக, 500 கிலோ வெங்காயம் விற்பனைக்கு வருகிறது என காய்கறி மண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கந்தசாமி கோவிலில் கொடியேற்றம்
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது காளிப்பட்டி கந்தசாமி கோவில். இங்கு, வரும், 25ல் தைப்பூச தேரோட்ட விழா நடக்க இருப்பதையொட்டி, நேற்று மாலை, 6:00 மணிக்கு, பருத்திப்பள்ளிநாடு செங்குந்த முதலியார்கள், காளிப்பட்டி நான்குரத வீதி வழியாக மேளதாளம் முழங்க, தாம்பூல தட்டுடன் கொடியை எடுத்து வந்து கோவிலில் கொடுத்தனர். பின், கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்ற விழா நடந்தது. கோவில் அறங்காவலர் செல்வகுமார், வெள்ளி காப்பு கட்டிக்கொண்டார்.
இதேபோல், மூலவர், உற்சவருக்கு வெள்ளி காப்பு கட்டப்பட்டது. மாலை, 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி திருவீதி உலா நடந்தது. 1,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
மா.கம்யூ., நிதி திரட்டல்
மா.கம்யூ., கட்சி சார்பில், நிதி திரட்டும் பணி நடந்தது.மா.கம்யூ., கட்சி சார்பில், நாடு முழுவதும் கட்சியின் வளர்ச்சிக்காக, நிதி வசூல் செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நேற்று மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட கருங்கல்பட்டி, சோமணம்பட்டி, பருத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் தேவராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுரேஷ், ரமேஷ், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புறா பிடிக்க சென்றவர்
கிணற்றில் விழுந்து பலி
ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வரதராஜ், 32. இவரது நண்பர் ராஜி, 38; இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகளுக்கு சென்று, அங்குள்ள புறாக்களை பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று, மலையாம்பட்டி பகுதி அருகே, வீரன் தோட்டத்தில் உள்ள, 100 அடி ஆழ கிணற்றில் இருவரும் புறா பிடிக்க வலை விரித்துக்கொண்டிருந்தனர். அப்போது, வரதராஜ் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தார். அதில், தலையில் பலத்த காயமடைந்த வரதராஜ் நீரில் மூழ்கினார். ராசிபுரம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஒருமணி நேரத்திற்கு மேலாக போராடி, வரதராஜை சடலமாக மீட்டனர். நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முட்டை விலை 5 காசு உயர்வு
நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடி முட்டை கோழிகள் மூலம், தினசரி, 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த, 5ல், 565 காசாக இருந்த முட்டை விலை படிப்படியாக குறைந்து, 16ல், 505 காசாக சரிவடைந்தது. இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் முட்டை விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 555, பர்வாலா, 568, பெங்களூரு, 560, டில்லி, 595, ஐதராபாத், 531, மும்பை, 586, மைசூரு, 555, விஜயவாடா, 542, ஹொஸ்பேட், 520, கோல்கட்டா, 630 என்ற விலையில் நிர்ணயம் செய்யப்பட்டது.
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நாமக்கல் அடுத்த தாளம்பாடியில் மஹா கணபதி, மஹா மாரியம்மன், ஓங்காளியம்மன், பழனியாண்டவர், பூதேவி, ஸ்ரீதேவி, சமேத சென்றாய பெருமாள் ஆலயம் மற்றும் அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர், நவகிரஹ மூர்த்திகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு நுாதன ஆலய பிம்ப அஷ்டபந்த கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாகவேள்வியும், 8:45 மணிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 10:30 மணிக்கு அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது.
மெட்டாலா, மங்களபுரத்தில்
'விஸ்வகர்மா யோஜனா'
நாமகிரிப்பேட்டை யூனியனில், 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.
நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி ஊராட்சிகளில், 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தில் பொதுமக்களை இணைக்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், பா.ஜ., மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில நிர்வாகி லோகேந்திரன் கலந்து கொண்டார். தொடர்ந்து, மத்திய அரசின் நலத்திட்டங்கள், அதன் பயன்கள், குறித்தும் விளக்கி கூறினார். அதன்பின், 'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
'விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தில் கிடைக்கும் மானியக்கடன் குறித்து, லோகேந்திரன் கூறினார். பெண்கள், 100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் சிறப்பு முகாம் அமைத்து, பயனாளிகளை பதிவு செய்யும் பணி நடந்தது. நேற்று நடந்த முகாமில் மட்டும், 100க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து கொண்டனர்.