/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : ஜன 25, 2024 10:08 AM
தைப்பூசத்தை முன்னிட்டு
வரும் 3, 4ல் கபடி போட்டி
தைப்பூசத்தை முன்னிட்டு, வெண்ணந்துார் அருகே, மின்னக்கல் ஊராட்சி வடுகபாளையம் கிராமம் பொன்னாங்காடு பகுதியில், 3-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி, வரும், வரும், 3, 4ல் நடக்கிறது. முதல் பரிசு, 10,000 ரூபாய், கோப்பை, இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய், கோப்பை, மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய், கோப்பை, நான்காம் பரிசு, 3,000 ரூபாய், கோப்பை குழு சார்பில் வழங்கப்பட உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகளை, எஸ்.பி.கே.ஜி., குழுவினர் செய்து வருகின்றனர்.
கணவன், மகன் மது பழக்கத்தால்எலி மருந்து சாப்பிட்டு பெண் பலி
குமாரபாளையத்தில் கணவன், மகன் மது குடிப்பதால், எலி மருந்து சாப்பிட்டு பெண் பலியானார்.
குமாரபாளையம் ஜே.கே.கே., நடராஜா நகரை சேர்ந்தவர் கீதா, 50. கணவர் சந்திரசேகர். இவர்களது மகன்கள் ரமேஷ், கார்த்தி. சந்திரசேகர் வேலைக்கு செல்லாமல், தொடர்ந்து மதுகுடித்து வந்துள்ளார். இதே பழக்கம், மகன் ரமேஷூக்கும் வந்ததால், மனமுடைந்த கீதா, நடராஜா நகரில் உள்ள தன் சகோதரர் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த, 20 மாலை, 1:30 மணியளவில், தனக்கு வாழ பிடிக்கவில்லை எனக்கூறி, கீதா எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, கீதா உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
எருமப்பட்டி பகுதியில்நெல்பயிர் அறுவடை தீவிரம்
எருமப்பட்டி பகுதியில், ஐப்பசி மாத பட்டமாக நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி துவங்கியுள்ளது.
எருமப்பட்டியை சுற்றியுள்ள காவக்காரப்பட்டி, நவலடிப்பட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த, 4 மாதங்களுக்கு முன் பெய்த பருவ மழையால் விவசாயிகள் ஐப்பசி மாத பட்டமாக, சூப்பர் பொன்னி, ஐ.ஆர்., 50, உள்ளிட்ட ரக நெல் நாற்றுகள் நடவு செய்தனர்.
இந்த நெற்பயிர்களை, தற்போது விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், நெல்லுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
எருமப்பட்டியை சுற்றி, 400 ஹெக்டேர் பரப்பளவில் ஐப்பசி மாத பட்டமாக நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 3 முறை நெல் நடவு செய்யப்படுகிறது. ஆனால், அறுவடை நேரத்தில் நெல்லுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. தற்போதும், அதே நிலை தான் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏரிக்கரையில் குப்பைக்கு தீபுகையால் மூச்சு திணறல்
ராசிபுரம், கோனேரிப்பட்டி ஏரிக்கரையில் குப்பைகளுக்கு தீ வைப்பதால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூச்சுத்திணறலால்
அவதிப்படுகின்றனர்.
ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் சாலையில், கோனேரிப்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, நகர் பகுதியை ஒட்டி இருப்பதால் இப்பகுதியில் சேகரிக்கப்படும் மட்கும், மட்காத குப்பைகளை ஏரிக்கரையோரம் கொட்டிச் செல்கின்றனர். இதனால், இப்பகுதியில் உள்ள ஏரி, குப்பையால் மூடப்பட்டுள்ளது. இந்த குப்பைகளுக்கு, மர்மநபர்கள் அதிகாலையிலேயே தீவைத்து விடுகின்றனர்.
இதனால், காலையில் இவ்வழியாக நடந்தும், டூவீலரிலும் செல்பவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும்போது வரும் புகையால் கண் எரிச்சல், சுவாச கோளாறால் திணறுகின்றனர். அதுமட்டுமின்றி இறைச்சி கடைகளில் இருந்து, கழிவுகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே, கோனேரிப்பட்டி ஏரியில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், தீ வைப்பதை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி வளைவு பகுதியில்
அடிக்கடி விபத்தால் அச்சம்
காவிரி வளைவு பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பகுதியில் கொண்டை ஊசி போன்று, இரண்டு வளைவு பகுதிகள் உள்ளன. இந்த வளைவு பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக பயணித்து வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் டூவீலரில் வரும் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் டூவீலரில் வருவோர் மிகுந்த அச்சத்துக்குள்ளாகின்றனர். எனவே, விபத்தை தடுக்கவும், வாகனங்கள் சீராக செல்லவும், வளைவு பகுதியில் சென்டர் மீடியன் வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.7 லட்சத்திற்கு
பருத்தி வர்த்தகம்
மல்லசமுத்திரத்தில், 7 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், மொத்தம், 320 மூட்டைகள் வரத்தாகின. பி.டி., ரகம் குவிண்டால், 6,560 முதல், 7,370 ரூபாய், கொட்டு பருத்தி, 3,999 முதல், 5,219 ரூபாய் என மொத்தம், 7 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 31ல் நடக்கிறது.
பொங்கல் விடுமுறைக்கு பின்
மீண்டும் இயங்கிய விசைத்தறிகள்
பொங்கல் பண்டிகையையொட்டி விடப்பட்ட நீண்ட விடுமுறைக்கு பின், தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பியதால், பள்ளிப்பாளையம் பகுதியில், நுாறு சதவீதம் விசைத்தறி கூடங்கள் இயங்க துவங்கின.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு, 30,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, 10 நாட்கள் நீண்ட விடுமுறை விடப்பட்டது. இதனால் எப்போதும் தறி இயங்கும் சத்தம் ஒலித்துக்கொண்டிருக்கும் பள்ளிப்பாளையம் பகுதியில், வெறிச்சோடி நிசப்தமாக காணப்பட்டது. மேலும், விசைத்தறிக்கு விடுமுறை என்பதால், அதனை சார்ந்து இயங்கும் ஓட்டல், டீக்கடை, பேக்கரி உள்பட பல்வேறு கடைகளுக்கு விடுமுறை அளித்தனர்.
தற்போது, விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்கள், நேற்று முதல் மீண்டும் பணிக்கு திரும்பியதால், நுாறு சதவீதம் விசைத்தறி கூடங்கள் இயங்க துவங்கின. இதனால் பள்ளிப்பாளையம் முழுதும் விசைத்தறி இயங்கும் சத்தம் ஒலிக்க தொடங்கியது.
சுங்க வசூல் உரிமம்: மறுஏலம் அறிவிப்பு
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட காமராஜர் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை, தினசரி சந்தை, வண்டிகேட் உள்ளிட்ட, 8 இடங்களில் சுங்க கட்டண வசூலிப்பதற்கான உரிமம் பெற, கடந்த, 22ல் ஒப்பந்தப்புள்ளி அறிவித்தனர். ஆனால், யாரும் ஏலம் கோரவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக வாரச்சந்தை வசூல் உரிமம் பெற, யாரும் ஏலம் கோரப்
படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், டவுன் பஞ்., ஊழியர்களே இப்பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த, 22ல் அறிவித்த
ஒப்பந்த புள்ளிக்கு ஏலம் எடுக்க யாரும் வராததால், மீண்டும் மறு ஏலம் வரும், 31 காலை, 11:00 மணிக்கு நடக்கிறது என, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
மஹா கணபதி கோவில்
கும்பாபிஷேகம் கோலாகலம்
சேந்தமங்கலம், ரெட்டிப்பட்டி கிராமம், கூலிப்பட்டியில் மஹா கணபதி, முத்தைய சுவாமி, பூமாலை சுவாமி, பச்சையம்மன், ராயப்பா சுவாமி கோவிலில், நேற்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் காலை கூலிப்பட்டி பிடாரி அம்மன் கோவில் மற்றும் கம்பராயன் கோவிலில் இருந்து காவிரி தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. அன்று மாலை முதற்கால யாகவேள்வி பூஜை நடந்தது.
நேற்று காலை, 6:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, கணபதி, பரிவார தெய்வங்கள் மூலமந்திர ஹோமம் நடந்தது. 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடத்தப்பட்டு, கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து மஹா தீபாராதனை,
அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நீதிபதி ராமராஜ் தலைமை வகித்தார். உறுப்பினர் ரமோலா முன்னிலை வகித்தார்.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
ஒவ்வொரு தேர்தலிலும், அச்சமின்றி ஓட்டுபோடுவோம். மதம், இனம், ஜாதி, மொழி ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு, எந்தவித துாண்டுதலும் இன்றி
ஓட்டுபோடுவோம். சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடக்க உறுதியாக இருப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில், 2022ல் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள, 22 வழக்குகளில், தாக்கல் செய்தவர்களுக்கும், எதிர் தரப்பினர்களுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைக்கு, வரும், 30ல் வரும்படி அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல், 2023ல் தாக்கல் செய்த வழக்குகளில், 60 வழக்குகளில், பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண, பிப்., மாதம் சமரசம் முகாம் நடக்கிறது என, தெரிவிக்கப்பட்டது. நாமக்கல் சிவில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராஜவேலு, நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுப்பராயன், தலைமை எழுத்தர் கணபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
கந்தபுரி பழனியாண்டவருக்கு
திருக்கல்யாண வைபோகம்
நாமக்கல் அருகே, கூலிப்பட்டியில் பிரசித்தி பெற்ற கந்தபுரி பழனியாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இன்று மாலை தைப்பூச தேர்த்திருவிழா நடக்கிறது. முன்னதாக, கடந்த, 17ல் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பழனியாண்டவர் பூதவாகனம், ஆட்டுக்கிடா வாகனம், மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டார். நேற்று, பழனியாண்டவருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. பின், கந்தபுரி மலை அடிவாரத்தில் பழனியாண்டவர் வள்ளி, தெய்வானை, திருக்கல்யாண வைபோகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புத்தக திருவிழா கலைநிகழ்ச்சி
மாணவ, மாணவியர் ஒத்திகை
நாமக்கல் தெற்கு அரசு அண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வரும், 26 முதல் பிப்., 2 வரை நடக்கும் புத்தக திருவிழாவில், தினமும் பல்வேறு தலைப்புகளில் கவிஞர்கள், பேச்சாளர்கள் பேசுகின்றனர். மேலும், கிராமிய கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், இசை நிகழ்ச்சி, மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி, கல்லுாரி மற்றும் அரசு கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியில், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் மாணவ, மாணவியர் ஈடுபட்டனர்.
நவோதயா பள்ளிகளை திறக்ககுடியரசு தலைவருக்கு கடிதம்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்கக கோரி, இந்து மக்கள் கட்சியினர் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பினர். மாநில செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு, 100க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டன.
அதில், 'அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழிப்போர் தியாகிகளுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி
பள்ளி கல்வித்துறை உத்தரவுப்படி, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆண்டுக்கு மூன்று தமிழ்க்கூடல் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும். அதன்படி, வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலை பள்ளியில், இரண்டாவது தமிழ்க்கூடல் நிகழ்ச்சி, தலைமையாசிரியை செல்வி தலைமையில் நடந்தது. தமிழ் ஆசிரியர் குமார், தமிழ்க்கூடல் நிகழ்ச்சியின் நோக்கம், பயன்கள் குறித்து பேசினார். தமிழ் சிந்தனை பேரவை தலைவர் ரமேஷ்குமார், 'நவரசங்களின் நன்மை தீமை' எனும் தலைப்பில் பேசினார். தமிழ் சிந்தனை பேரவை செயலாளர் கமலசேகரன், வாழ்த்தி பேசினார். தொடர்ந்து, மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், பாட்டு போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியர் மாதேஸ் நன்றி கூறினார். ஆசிரியர்கள் முத்து, அருள், தங்கராஜ், ஜெகதீஸ், பார்வதி, கீதா மாதேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.