sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

/

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்


ADDED : ஜன 28, 2024 11:01 AM

Google News

ADDED : ஜன 28, 2024 11:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி இன்ஸ்பெக்டர் ரவி, கோவை டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, சேலம் கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், பரமத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். ஜேடர்பாளையம் ஸ்டேஷனுக்கு இதுவரை தனியாக இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை. அதனால், பரமத்தி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், ஜேடர்பாளையம் ஸ்டேஷனுக்கு பொறுப்பு அதிகாரியாக உள்ளார்.

புதிய தொழிற்பள்ளி துவங்கநாளைக்கும் விண்ணப்பிக்கலாம்

'நாமக்கல் மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

நடப்பு, 2024--2025ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் நீட்டிப்பு செய்தல், கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளை, 29ம் தேதி நள்ளிரவு, 11:59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அல்லது இதுகுறித்த விபரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அல்லது சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகம், 0427 2900142 தொலைபேசி எண் மற்றும் rjdtslm@gmail.com மின்னஞ்சலை தொடர்பு கொண்டும் விபரங்களை பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

பகவதி அம்மன் கோவிலில்நாளை கும்பாபிஷேக விழா

ப.வேலுார் சுல்தான்பேட்டையில், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, விநாயகர், முருகன், பகவதி அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை உற்சவ மூர்த்திகளுக்கு பிராண பிரதிஷ்டை, 8ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த, எட்டுப்பட்டி தர்மகர்த்தாக்கள் மற்றும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, மகா சங்கல்பம் தொடர்ந்து கும்ப அலங்காரம், முதற்கால யாகபூஜைகள் தொடங்குகின்றன. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், பிராண பிரதிஷ்டை மற்றும் யாக வேள்வி நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு

சிறப்பு மருத்துவ முகாம்

பள்ளிப்பாளையம் ஜீவாசெட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், மாற்றுத்தினாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நேற்று நடந்தது. இதில், எலும்பு முறிவு சிகிச்சை, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயர்சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 59 பேருக்கு அடையாள அட்டை, 54 பேருக்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை, 40 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, 16 பேருக்கு உயர் பாதுகாப்பு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், சக்கர நாற்காலி, காதொலி கருவி, தையல் இயந்திரம், என மொத்தம், 65,350 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

இ.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம்

எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் நடந்த இ.கம்யூ., கட்சியின் ஒன்றியக்குழு கூட்டத்திற்கு, ஒன்றிய துணை செயலாளர் யுவராஜ் தலைமை வகித்தார். இதில், நாளை மறுநாள் பெரியமணலி பஸ் ஸ்டாப்பில், இலவச வீட்டுமனை வேண்டி, கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும். ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் பிப்., 16ல் நடக்கும் நாடுதழுவிய மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். பெரியமணலியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும். மேட்டூர் உபரி காவிரிநீரை திருமணிமுத்தாற்றுடன் இணைக்க வேண்டும். பெரியமணலி, பண்ணாரியம்மன் நகர், கோட்டபாளையம், அத்திக்காடு பகுதிகளில் மின்விளக்கு மற்றும் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் அன்புமணி, ஒன்றிய செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குமாரபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது. இதை தொடர்ந்து, மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் ஆகியோர், ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் மைதானம், வாடிவாசல், வீரர்கள் மைதானத்துக்குள் வர தனிப்பாதை, காளைகள் வெளியேறும் இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி, தேவையான ஏற்பாடுகளை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு, கலெக்டர் உமா அறிவுறுத்தினார். ஏற்பாடுகளை குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.

பறவைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், 2023-24ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி, நேற்று துவங்கியது.

நாமக்கல், ராசிபுரம் வன கோட்டத்திற்கு உட்பட்ட துாசூர் ஏரி உள்பட, 18 ஈர நிலங்களில் வனச்சரகர்கள், வனத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பறவையியல் நிபுணர்கள் என, 80 பேர் கலந்து கொண்டு கணக்கெடுப்பு நடத்தினர்.

தொடர்ந்து இன்றும் (ஜன., 28) இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மார்ச், 2, 3 தேதிகளில், வனப்பகுதியில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் துவங்கி வைத்தார். நாமக்கல் வனச்சரகர் பெருமாள், ராசிபுரம் வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.

மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து, சேலம் பறவையியல் கழகம் இந்த கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. பறவையின ஆர்வலர்களான ஏஞ்சலின் மனோ தலைமையிலான குழுவினர், தனித்தனியே பிரிந்து சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். அதில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளர். நாமக்கல் வனக்கோட்டத்தில் ஏரி, குளங்களில் பறவைகளை கணக்கெடுத்தனர்.

கவர்னரை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தியின் விடுதலை போராட்ட வரலாற்றை திரித்து பேசும் கவர்னரை கண்டித்து, கிழக்கு மாவட்ட காங்., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் - மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நடந்தது.

மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வீரப்பன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை போராட்ட வரலாற்றை திரித்து பேசிய கவர்னரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பொதுக்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, ஜோதி, நகர தலைவர்கள் மோகன், ஸ்ரீராமுலு முரளி, பேரூர் தலைவர் சிங்காரம், மாவட்ட எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் பொன்முடி, மாணவர் காங்., முன்னாள் நிர்வாகி டாக்டர் பாலாஜி, நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

மது போதையில் கார் ஓட்டி

விபத்து: வாலிபர் மீது வழக்கு

ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன், 34. இவர் சொந்தமாக கார் வைத்து, வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சரத்குமார், 29, என்பவர், நேற்று தாமரைக்கண்ணனிடமிருந்து காரை வாங்கிக்கொண்டு சென்றார். பின், மது அருந்திவிட்டு அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, சாலை வளைவில் அதிவேகமாக காரை திருப்பியதால், கட்டுப்பாட்டை இழந்த கார், முருகேசன் வீட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. முருகேசன் மற்றும் குழந்தையும் வெளியே படுத்திருந்ததால், இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து ஏற்படுத்திய சரத்குமார் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகார்படி, ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து காரை பறிமுதல் செய்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய சரத்குமாரை தேடி வருகின்றனர்.

அணைக்கட்டில்மூழ்கி வாலிபர் பலி

ப.வேலுார் அருகே, ஜேடர்பாளையம் காவிரியாறு அணைக்கட்டில், நேற்று மாலை, நாமக்கல், ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த சண்முகநாதன் மகன் பாலமுருகன், 19, மற்றும் இவரது நண்பர்கள், 11 பேரும் சேர்ந்து குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற பாலமுருகன், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளார்.

நண்பர்கள் இவரை காப்பாற்ற முயன்றும், முடியாததால் நீரில் மூழ்கி உயிழந்தார். அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் பிரேதத்தை மீட்டு, ஜேடர்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரூ.1 லட்சத்திற்கு

கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், ஜன. 28-

மல்லசமுத்திரத்தில், நேற்று ஒரு லட்சம் ரூபாய்க்கு, கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. மொத்தம், 30 மூட்டை கொப்பரை தேங்காயை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில், முதல் தரம் கிலோ, 72.50 முதல், 82.90 ரூபாய், இரண்டாம் தரம், 57.90 முதல், 69.30 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் பிப்., 2ல் நடக்கிறது என, மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

காவடியுடன் பாதயாத்திரை

தொடங்கிய முருக பக்தர்கள்

குமாரபாளையம், ஜன. 28-

குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம், வீரப்பம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆண்டுதோறும் காவடி எடுத்தவாறு, பாதயாத்திரையாக சென்னிமலை, சிவன்மலை செல்வது வழக்கம். நேற்று காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம், காவடிகள் எடுத்தபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, விநாயகர் மற்றும் முருகப்பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் செய்தனர். காவடிகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கினர். இதில், 250க்கும் மேற்பட்டோர் காவடிகள் எடுத்துக்கொண்டு, அரோகரா கோஷத்துடன் சென்னிமலை, சிவன்மலை புறப்பட்டனர்.

17 டன் காஸ் லோடுடன் டேங்கர் லாரி

நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து

ராசிபுரம், ஜன. 28-

பெங்களூரில் இருந்து, 17 டன் எல்.பி.ஜி., காஸ் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை டிரைவர் சண்முகம், 48, ஓட்டிவந்தார். நேற்றிரவு, 9:00 மணியளவில் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தது. 'அப்போது லாரியின் முன்புற டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. டிரைவர் சண்முகம் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், எரிவாயுவை வேறு லாரிக்கு மாற்றும் பணி நடந்ததால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ராசிபுரம் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலையில் கிடந்த ரூ.50,000

உரியவரிடம் ஒப்படைப்பு

வெண்ணந்துார், ஜன. 28-

வெண்ணந்துார் அருகே, ஓ.சவுதாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளராக பணியாற்றி வருபவர் அருணாச்சலம். இவர், தன் நண்பர்களிடம் அவசர தேவைக்காக, ஒரு லட்சம் ரூபாய் கடனாக வாங்கி டூவீலரில் வைத்துக்கொண்டு, ராசிபுரத்தில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, 2 பணக் கட்டுகளில், ஒரு கட்டு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, வெண்ணந்துார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்நிலையில், கோத்தகிரி சுகர்ஸ் நிறுவனத்தில், கரும்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் திருச்சியை சேர்ந்த ரகுமான், 42, அருண்குமார், 40, ஆகிய இருவரும், டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, அத்தனுார் அடுத்த சித்தர் கோவில் அருகே உள்ள வேகத்தடை பகுதியில், 50,000 ரூபாய் பணக்கட்டை கண்டெடுத்தனர். பின், வெண்ணந்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனத்திடம் பணத்தை ஒப்படைத்தனர். இதையடுத்து, அருணாச்சலத்தை வரவழைத்து, பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட அருணாச்சலம், போலீசார் மற்றும் ரகுமான், அருண்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். போலீசார் அவர்கள் இருவரையும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us