/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : பிப் 01, 2024 10:56 AM
சாலை சீரமைப்பு பணி
நிதி ஒதுக்க தீர்மானம்
நாமக்கல் நகராட்சி அலுவக கூட்டரங்கில், கவுன்சிலர் கூட்டம் நடந்தது. தலைவர் கலாநிதி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், துணைத்தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 8வது வார்டு தும்மங்குறிச்சி முதல், தெற்கு தோட்டம் செல்லும் சாலை வரையிலும், 12வது வார்டு போதுப்பட்டி முதல், பரமத்தி செல்லும் சாலை வரையிலும், 37வது வார்டு பெரியப்பட்டி முதல், கணவாய்ப்பட்டி வரையிலும் பழுதான சாலையை சீரமைக்க பொதுநிதியில் இருந்து, 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2 ஆண்டுகளுக்கு பின்
மாரியம்மன் கோவில் திறப்பு
மல்லசமுத்திரம் யூனியன், கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், பூசாரியை நியமிப்பது தொடர்பாக, இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததால், கடந்த, 2 ஆண்டுகளாக மாரியம்மன் கோவில் திறக்காமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த, 5ல், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டியதையடுத்து, நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர் மணிகண்டன், ஆர்.ஐ., பிரபாவதி, வி.ஏ.ஓ., ராஜ்குமார் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டது.
இதில், பூசாரியாக மங்களம் பகுதியை சேர்ந்த சபரீசன் என்பவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மொஞ்சனுாரை சேர்ந்த ராஜா சிவாச்சாரியார் தலைமையில் யாகம் நடத்தப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்டது.
மின்னணு ஓட்டுப்பதிவு
மக்களுக்கு விழிப்புணர்வு
நெருங்கி வரும் பார்லிமென்ட் தேர்தலில், வாக்காளர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு ஓட்டுப்பதிவு செய்வது என்பது குறித்து, மல்லசமுத்திரம் ஒன்றியம், கோட்டப்பாளையம் கிராமத்தில், நடமாடும் செயல்முறை விளக்க வாகனத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆர்.டி.ஓ., சுகந்தி, ஆர்.ஐ., பிரபாவதி, வி.ஏ.ஓ., ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கெட்டுப்போன இறைச்சி
ஓட்டலுக்கு அபராதம்
குமாரபாளையம் ஓட்டல் கடைகளில், கெட்டுப்போன பழைய உணவுகளை விற்பதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, சேலம் சாலை, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஓட்டல் கடைகளில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன் ஆய்வு செய்தார்.
அப்போது, பத்து கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும், ஓட்டலுக்கு, 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் விதிமீறும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை தொடரும் என, ரங்கநாதன் தெரிவித்தார்.
கரும்பு விவசாயிகளைஊக்கப்படுத்த ரூ.2.50 லட்சம் பரிசுகரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்த அதிக மகசூலுக்கு, 2.50 லட்சம் ரூபாய் பரிசு என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், வேளாண் அதிகாரிகள், குமாரபாளையம் அருகே சீராம்பாளையம் பகுதியில் உள்ள பழனியப்பன் என்பவரது கரும்பு தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து, ஈரோடு வேளாண் துறை இணை இயக்குனர் வெங்கடேசன் கூறியதாவது:
விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிறு தானியம், எண்ணெய் வித்துக்கள், கரும்பு உள்ளிட்ட, 11 பயிர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக அறுவடை பரிசோதனை நடந்து வருகிறது. இதில் முதல் பரிசு, 2.50 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, 1.50 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு, ஒரு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான கரும்பு அறுவடை நடக்கிறது. இதில் வேளாண் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஒரு ஏக்கர் மகசூல் கணக்கிடப்படுகிறது. பிற மாவட்டங்களில் இந்த அறுவடை நிறைவு பெற்று, அரசின் பரிசீலனைக்கு பின் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உயரம் தாண்டுதலில்
இளைஞர் சாதனை
சென்னையில் நடந்த தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு விழாவில், உயரம் தாண்டும் போட்டியில், தமிழக அணி சார்பில் குமாரபாளையம், ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த வீரர் தருண் விகாஸ் கலந்துகொண்டார். அதில்
தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
குமாரபாளையம், 'விடியல் ஆரம்பம்' சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சேலம் மாவட்ட டி.எஸ்.பி., சண்முகம், சாதனை படைத்த தருண் விகாஸ்க்கு பதக்கம் அணிவித்து, புத்தகம் வழங்கி பாராட்டினார்.
சாலை அகலப்படுத்தும் பணி
வெண்ணந்துார் அருகே, மேட்டுமிஷின்- சவுதாபுரம் சாலை குறுகியதாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாட்டுவேலம்பட்டி, தொட்டியபட்டி, பழந்தின்னிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள், இந்த சாலை வழியாக ராசிபுரம், சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு குறைந்த துாரத்தில் சென்று விடுகின்றனர். இதனால், போக்குவரத்து அதிகம் காணப்படும். அதனால், இந்த சாலையை அகலப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையத்து, நெடுஞ்சாலைத்துறை மூலம் அத்தனுார் அடுத்த மேட்டுமிஷின் சாலை முதல் சவுதாபுரம் சாலை வரை சாலை அகலப்படுத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது.
ரூ.8 லட்சத்திற்கு
பருத்தி வர்த்தகம்
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின்,
மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.
இதில், 360 மூட்டை பருத்தியை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். பி.டி., ரகம் குவிண்டால், 6,620 முதல், 7,410 ரூபாய், கொட்டு பருத்தி, 4,005 முதல், 5,320 ரூபாய் என, மொத்தம், 8 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.
அடுத்த ஏலம் வரும், 7ல் நடக்கிறது என, மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
குழாய் பதிப்பதில்
தகராறு: 2 பேர் கைது
எருமப்பட்டி அருகே, பொன்னேரி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுதாகர், 45; எலக்ட்ரீஷியன். இவருக்கும், இவரது உறவினருக்கும் பொதுக்குழாய் போட்டதில் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த, 17ல் சுதாகர் நின்றிருந்த போது அங்கு வந்த அவரது உறவினர் ரவீந்திரன், சுதாகரை தாக்கியதுடன், அவரது மச்சான் கருப்புசாமியை அழைத்து வந்து கட்டையால் தாக்கினார். இதுகுறித்து புகார்படி, எருமப்பட்டி போலீசார், ரவீந்திரன், கருப்பு சாமியை கைது செய்தனர்.
ப.வேலுார் டவுன் பஞ்., சுங்க வசூல் உரிமம்
குறைந்த நபர்களே வந்ததால் ஏலம் ஒத்திவைப்பு
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து பகுதியில் சுங்க வசூல் உரிமம் பெற நடத்தப்பட்ட ஏலத்தில், குறைந்த நபர்களே பங்கேற்றதால், தேதி குறிப்பிடாமல் ஏலம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட காமராஜர் பஸ் ஸ்டாண்ட், வாரச்சந்தை, தினசரி சந்தை, வண்டி கேட் உள்ளிட்ட, எட்டு இடங்களில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கான உரிமம் பெற, கடந்த ஜன., 22ல் ஒப்பந்த புள்ளி அறிவித்தனர். ஆனால், யாரும் ஏலம் கோரவில்லை. மீண்டும் மறுஏலம், நேற்று காலை, 11:00 மணிக்கு டவுன் பஞ்., அலுவலகத்தில், தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் நடந்தது. அதில், குறைவான நபர்களே கலந்துகொண்டனர். அதிலும் அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லாததால், மீண்டும் ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக, தலைவர் லட்சுமி அறிவித்தார்.
'கொரோனா காலத்திற்கு பின், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் பஸ்களின் வருகை பாதியாக குறைந்துள்ளது. ஏலத்தொகையும் அதிகமாக இருப்பதால், ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. ஏலத்தொகையை குறைத்தால் மட்டுமே ஏலம் எடுக்க முன் வருவார்கள்' என, ஏலம் எடுக்க வந்தவர்கள் தெரிவித்தனர்.
குடிநீர் தொட்டி துாண்கள் சேதம்
புதியது கட்ட மக்கள் கோரிக்கை
பவித்திரம் பஞ்சாயத்தில், துாண்கள் இடிந்து கிடக்கும் குடிநீர் தொட்டிக்கு பதிலாக, புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எருமப்பட்டி யூனியன், பவித்திரம் பஞ்., முசிறி சாலையில், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டி மூலம், தினமும் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் தொட்டியின் துாண்கள் விரிசலடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அருகில் நின்று தண்ணீர் பிடிக்க மக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, இந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்ட பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் 3ல் அண்ணாதுரை நினைவு தினம்அமைதி பேரணிக்கு மா.செ., அழைப்பு
'வரும், 3ல் நடக்கவுள்ள, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாள் அமைதி பேரணியில், கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும்' என, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 55வது நினைவு நாளான, வரும், 3ல், காலை, 7:30 மணிக்கு அமைதி பேரணி நடக்கிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் தலைமை வக்கிறார். நகர செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், ராணா ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சேலம் சாலை, நேதாஜி சிலை அருகில் துவங்கி, மோகனுார் சாலை அண்ணாதுரை சிலை அருகே முடிவடைகிறது. தொடர்ந்து, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து. மலர் துாவி மாரியாதை செலுத்தப்படுகிறது.
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,
எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நகராட்சி தலைவர் கலாநிதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாநில, மாவட்ட, இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், கவுன்சிலர்கள், கிளை மற்றும் வார்டு செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பராமரிப்பில்லாத முக்கோண பூங்கா
ப.வேலுார் நுழைவாயிலில் உள்ள முக்கோண பூங்கா, தக்க பராமரிப்பின்றி தடுப்பு கம்பிகள்
சேதமாகி உள்ளது. இதில் உள்ள நீரூற்று, மக்களை வரவேற்கும் விதமாக காட்சியளித்து வந்தது. மேலும், இரவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.
தற்போது, அதில் உள்ள செடிகளுக்கு தண்ணீரின்றி செடிகள் காய்ந்து கருகி விட்டன. நீரூற்றும் பழுதடைந்து விட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முக்கோண பூங்காவின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது.
எனவே, முக்கோண பூங்காவில் மீண்டும் மலர் செடிகளை வைத்து, ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.