/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : பிப் 16, 2024 10:42 AM
அடையாளம் தெரியாத
வாகனம் மோதி ஒருவர் பலி
குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
குமாரபாளையம், கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வரும் வாகனங்கள் அனைத்தும், இரு புறமும் உள்ள சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், சேலம் பக்கமிருந்து வாகனங்கள் வரும் சர்வீஸ் சாலையை, முதியவர் ஒருவர் மதியம், 2:50 மணியளவில் நடந்து கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இடது கால் முழுதும் நசுங்கிய நிலையில், பலத்த அடிபட்டு கீழே விழுந்தார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை இறந்தார்.
இவரது சட்டை பையில் உள்ள சீட்டில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ததற்கான விபரங்கள் மற்றும் பெயர் ராஜூ என்றும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதில் விலாசம் உள்ளிட்ட எந்த விபரமும் இல்லை. இது குறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ப.வேலுாரில் இலவசமருத்துவ முகாம்ப.வேலுாரில், குழந்தை பேறுக்கான இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம், சுல்தான்பேட்டையில் உள்ள பொன்னி மெடிக்கல் சென்டரில் நாளை நடக்கிறது.
ப.வேலுார், பொன்னி மெடிக்கல் சென்டர் மற்றும் ராயல் கேர் ஹாஸ்பிடல் நடத்தும் இலவச மருத்துவ முகாமில் பெண்களுக்கான கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்னை, கர்ப்பப்பை குறைபாடுகள், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, உயிர் அணுக்கள் குறைபாடுகள் குறித்து இலவச பரிசோதனை, மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடக்கிறது. டாக்டர் கல்யாண குமாரி, நளினி, சாந்தி, அரவிந்த் ஆகியோர் முகாமில் கலந்து கொள்கின்றனர். முகாமில் குழந்தை இல்லாத தம்பதியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, பொன்னி மெடிக்கல் சென்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன்டெய்னர் லாரி
மோதி கணவன், மனைவி காயம்
குமாரபாளையம் அருகே, டூவீலர் மீது கன்டெய்னர் லாரி மோதி கணவன், மனைவி படுகாயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம், லட்சுமி நகரில் வசிப்பவர் சுரேஷ்பாபு, 33, லாரி ஓட்டுனர். நேற்று மதியம், 2:30 மணியளவில் சேலத்திலிருந்து பவானி நோக்கி, பல்சர் பைக்கில் தன் மனைவி மெகராஜ், 33, என்பவரை பின்னால் உட்கார வைத்து, குமாரபாளையம் அருகே எதிர்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த, கன்டெய்னர் லாரி, இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தலைமறைவான லாரி ஓட்டுனரை குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிகளில் லேப்டாப்களை
பழுது நீக்கும் பணி துவக்கம்
நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் இருந்த இலவச லேப்டாப்களை பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களால் அவை வழங்கப்படவில்லை. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயன்படுத்தாமல் தேங்கியிருந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட லேப்டாப்களை பழுது நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த பணியை, 20கும் மேற்பட்ட பணியாளர்கள் செய்து வருகின்றனர். இவற்றை அரசு பள்ளிகளின், அலுவலக பயன்பாட்டுக்கு வழங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடையாளம் தெரியாத வாகனம்
மோதி பெண் கவலைக்கிடம்
நாமகிரிப்பேட்டை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியில், நேற்று அதிகாலை சாலையோரம், 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். காலை, 6:00 மணியளவில் அவ்வழியாக வந்த விவசாயிகள் அளித்த தகவல்படி, பெண்ணை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அழைத்து சென்றனர்.
விபத்து பகுதியில் இருந்த மொபைல் போன்மூலம் போலீசார் விசாரணை நடத்தியதில், கொல்லிமலை, செங்கரை கோபால் மகள் பழனியம்மாள், 20, என்பதும் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், பழனியம்மாள் இருந்த இடத்தில் டூவீலர் விபத்து நடந்த அடையாளங்கள் இருந்ததால், அந்த வாகனம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இஸ்கான் சார்பில்
சங்கீத பாதயாத்திரை
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இஸ்கான் சார்பில் ஆன்மீக பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணன் நாமத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்திலும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்குவதற்கும் பகவத்கீதை புத்தகத்தை அனைவரது வீட்டிலும் வைத்திருக்க வசதியாக மானிய விலையில் புத்தக விற்பனை செய்யவும் நாமக்கல் இஸ்கான் சார்பில் சங்கீத பாத யாத்திரையை தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் இந்த யாத்திரை செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று நாமக்கல் இஸ்கானில் இருந்து புறப்பட்ட யாத்திரை சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி வழியாக ராசிபுரம் வந்தடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கிருஷ்ண பஜனையுடன் இந்த
யாத்திரை நடந்து வருகிறது.
ரூ 11.17 லட்சத்துக்கு
தேங்காய் பருப்பு ஏலம்
தேசிய வேளாண்மை சந்தையில், 11.17 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது.
கடந்த வாரம் நடந்த தேசிய வேளாண்மை சந்தையில், 16 ஆயிரத்துக்கு, 677 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனர். நேற்று ஏலத்திற்கு, 15 ஆயிரத்துக்கு, 365 கிலோ தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். அதிக பட்சமாக கிலோ, 72.99 ரூபாய், குறைந்தபட்சமாக, 60.25 ரூபாய், சராசரியாக, 66.29 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 11 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
மாற்று கட்சியினர்
தே.மு.தி.க.,வில்
ஐக்கியம்
பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுார் பகுதியில் மாற்று கட்சியை சேர்ந்த பலரும், தே.மு.தி.க.,வில் இணையும் நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது. தே.மு.தி.க., நாமக்கல் வடக்கு மாவட்ட செயலர் விஜய்சரவணன் கலந்து கொண்டார். அவருக்கு சால்வை அணிவித்து, பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றிய, அ.ம.மு.க., செயலர் சக்திவேல் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த, 60க்கும் மேற்பட்டவர்கள் தே.மு.தி.க.,வில் இணைந்தனர்.