/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
/
செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்
ADDED : பிப் 18, 2024 10:45 AM
டூவீலர் மோதி தொழிலாளி பலி
நாமக்கல், பில்லுாரை சேர்ந்தவர் குப்புசாமி, 83; கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 15ல் வீட்டிலிருந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது, பரமத்தியிலிருந்து பில்லுாரை நோக்கி வந்த டூவீலர் குப்புசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்துசாமியை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, நேற்று முன்தினம், குப்புசாமி இறந்தார். இதுகுறித்து புகார்படி, டூவீலர் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய, பரமத்தி அருகே, மாவு ரெட்டியை சேர்ந்த கதிரேசன் மகன் முகேஷ், 19, என்பவரை கைது செய்து பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழில்நுட்ப பூங்காவில் தீகுமாரபாளையம் அருகே, வளையக்காரனுார், காவேரி உயர் தொழில்நுட்ப பூங்காவில், நேற்று மாலை, 4:00 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மேல்தளத்தில் பரவியது. இதுகுறித்து குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயியை தாக்கிய வாலிபர் கைதுஎருமப்பட்டி அருகே, கஸ்துாரிப்பட்டியை சேர்ந்தவர் மனோகரன், 60; விவசாயி. இவர் கடந்த, 6ல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, வரகூரை சேர்ந்த மணிவாசகம், 28, என்பவர் மனோகரனின் டூவீலரை நகர்த்தி வைத்துள்ளார். இதை பார்த்த மனோகரன், 'எதற்காக என் டூவீலரை நகர்த்தி வைத்தாய்' எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கைகலப்பு ஏற்பட்டு மனோகரனை, மணிவாசகம் தாக்கியுள்ளார். காயமடைந்த மனோகரன் அளித்த புகார்படி, எருமப்பட்டி போலீசார் மணிவாசகத்தை, நேற்று கைது செய்தனர்.
அங்கன்வாடி மையம்
முதல்வர் திறப்பு
மல்லசமுத்திரம் யூனியனில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின், காணொலியில் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்களை, நேற்று காணொலியில் திறந்து வைத்தார். அதன்படி, மல்லசமுத்திரம் யூனியனுக்குட்பட்ட சோமணம்பட்டி, ராமாபுரம், பள்ளிப்பட்டி, பருத்திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், 46.55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும், மல்லசமுத்திரம் அரிஜன காலனியில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 2 பள்ளி அறைகளையும் காணொலியில் திறந்து வைத்தார். இதில் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சோமேஸ்வரர் கோவிலில்
கொடியேற்று விழா
சேந்தமங்கலம் நைனாமலை வருதராஜ பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் சோமேஸ்வரர் கோவில் மாசி மாத தேர்த்திருவிழா வரும், 26ல் நடக்கிறது. இதையொட்டி, கொடியேற்ற விழா நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின், சோமேஸ்வரர் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
குமாரபாளையத்தில்
தொழில்நெறி வழிகாட்டி
குமாரபாளையம் அறிவுசார் மையத்தில், தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி, நகராட்சி கமிஷனர் சரவணன் தலைமையில் நடந்தது. திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி பங்கேற்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் இந்த அறிவுசார் மையம். இந்த அறிவுசார் மையத்தில் அனைத்து விதமான உயர்தொழில் நுட்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி மாணவ, மாணவியர் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், ஓய்வு பெற்ற முதுநிலை விஞ்ஞானி இளங்கோ, அண்ணா மேலாண்மை பல்கலை மண்டல அலுவலகத்தை சேர்ந்த சக்திவேல், லால்குடி ஆசிரியர் பயிற்றுனர், நுண்கலை வல்லுனர் தமிழரசி, பாரதியார் பல்கலை பேராசிரியை சத்யா, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நெடுஞ்சாலைத்துறை நட்ட மரக்கன்றுகளை
பாதுகாக்க மூங்கில் கூண்டு தயாரிப்பு தீவிரம்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், மூங்கில் கூண்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் அருகே, முத்துகாப்பட்டியில் இருந்து ராசிபுரம் பிரிவு சாலை வரை, 80 கி.மீ., துாரத்திற்கு இருவழிச்சாலையை, 171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தி புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக சாலையோரம் இருந்த ஆயிரக்கணக்காக புளிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இதையடுத்து, வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக, 2,000க்கும் மேற்பட்ட புளிய மரம், வேப்பன், புங்கன் போன்ற மரக்கன்றுகள், சாலையோரங்களில் நடப்பட்டுள்ளன. இந்த மரக்கன்றுகளை கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில், சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மூங்கில்களால் கூண்டு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, நெஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் பிரனேஷ் கூறியதாவது:
இருவழிச்சாலை, புறவழிச்சாலை அமைக்கப்பட்டபோது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, புதிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த கன்றுகளை பாதுகாக்கும் வகையில் மூங்கில்களால், 2,000க்கும் மேற்பட்ட கூண்டுகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளியில்
ஆண்டு விழா
நாமக்கல் மாவட்டம், உடுப்பம் அடுத்த முத்தப்புடையாம்பாளையம் பஞ்., துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரசேகரன், பி.சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, வருவாய் துறை அதிகாரி ஆனந்தன், பன்னீர்செல்வம் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். தலைமையாசிரியர்கள் ஜெயராஜ், சாந்தி, கண்ணன், மாதேஸ்வரன், ரமேஷ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. ஏற்பாடுகளை, உதவி ஆசிரியர் கண்ணன், மேலாண் குழு தலைவர் மீனா ஆகியோர் செய்திருந்தனர்.