/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சங்ககிரி தொகுதியில் ஜெயிக்கப் போவது யாரு?
/
சங்ககிரி தொகுதியில் ஜெயிக்கப் போவது யாரு?
ADDED : மார் 13, 2011 03:05 AM
சங்ககிரி: சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில் ஒன்றான சங்ககிரி தொகுதி, 1957ல் பொது தொகுதியாக உதயமானது.
பின்னர், 1967ல் நடந்த தொகுதி மறு சீரமைப்பில், 'தனி' தொகுதியாக மாற்றப்பட்டு, இடைத்தேர்தல் உள்பட இதுவரை, 13 சட்டசபை தேர்தலை சங்ககிரி தொகுதி சந்தித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் எலச்சிபாளையம் ஒன்றியம், சேலம் மாவட்டத்தில் சங்ககிரி ஒன்றியம் என, இரு மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதியாக சங்ககிரி இருந்தது. அண்மையில் நடந்த, தொகுதி மறு சீரமைப்பில் மீண்டும் பொது தொகுதியான சங்ககிரி, தற்போது 14வது சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. 44 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, பொது தொகுதியாக மாற்றப்பட்டு, முதல் தேர்தலை சந்திக்கும், 'சங்ககிரி தொகுதி' எல்லையும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
மறு சீரமைப்பில், ரத்து செய்யப்பட்ட தாரமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட தாரமங்கலம் பேரூராட்சி, ஒமலூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி மற்றும் இடைப்பாடியில் தொகுதியில் மகுடஞ்சாவடி ஒன்றியம், சங்ககிரி தாலுகா பகுதிகளை அங்கமாக கொண்டு, சேலம் மாவட்டத்தை மட்டுமே சார்ந்துள்ள தொகுதியாக, சங்ககிரி தொகுதி விளங்குகிறது. சங்ககிரி தொகுதியின் மொத்த வாக்காளர்கள், 2, 12, 064 பேர் . இதில், ஆண் வாக்காளர்கள், 1,09,344 பேர். பெண் வாக்காளர்கள், 1,02,706 பேர். ஆண்களை விட, 6, 638 பெண் வாக்காளர்கள் குறைவு. திருநங்கைகள் 16 பேர் உள்ளனர். இதுவரை நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 2 முறை, தி.மு.க., 6 முறை, அ.தி.மு.க., 5 முறையும் சங்ககிரி தொகுதியை கை பற்றியுள்ளது. அதிக அளவில் வன்னியர்கள், அடுத்து கொங்கு வேளாளர் , சோழியர், முஸ்லீம், முதலியார் உள்பட கணிசமான அளவில் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தினரும் இத்தொகுதியில் வசிக்கின்றனர்.
தொகுதியின் தலைமையிடமாக விளங்கும் சங்ககிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் கழிவுநீர் கால்வாய் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதுவரையிலும், அப்பிரச்னை கேள்வி குறியாகவே உள்ளது. அதேபோல, குடிநீர் பிரச்னை, சாலை வசதி, மின்விளக்கு வசதிகள் தன்னிறைவு பெறவில்லை என்பது அப்பகுதி மக்களிடையே ஓங்கி ஒலிக்கும் வலுவான குற்றச்சாட்டு. அடுத்தது, போக்குவரத்து பிரச்னை தொகுதி மக்களை பாடாய்படுத்துகிறது. சங்ககிரி பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை, ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு செய்யப்பட்டுள்ள ஆக்ரமிப்பால், அப்பகுதியை கடந்து செல்வது நரக வேதனை. சேலம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளராக பொன்.மாணிக்கவேல் இருந்தபோது, போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டது. தற்போது, இடியாப்ப சிக்கலாக பொதுமக்கள் தவித்து வருவது கண்கூடாக தெரிகிறது.
சங்ககிரி ஆர்.எஸ்., பகுதியில், குறுகிய நுழைவு பாலம் உள்ளது. அங்கிருந்து, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல், டீஸல் குடோன் உள்ளது. இங்கிருந்து, சேலம், ஈரோடு மாவட்ட பகுதிகளுக்கு பெட்ரோல், டீஸல் சப்ளை செய்யும் லாரிகள் அனைத்தும் குறுகிய நுழைவு பாலம் வழியாக தான் வந்தாக வேண்டும். அந்த பாலத்தின் வழியாக நாள் ஒன்றுக்கு சராசரி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. அப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கிடப்பிலேயே இருந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை, 47 பகுதியில், சங்ககிரி தொகுதி அமைந்துள்ளதால் அவசர, அவசிய தேவைக்காக கூடுதல் வசதிகளுடன் சங்ககிரி அரசு மருத்துவமனை மேம்படுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் நோக்கமும் நிறைவேற்றப்படவில்லை.
இரும்பு கம்பெனி, லாரி பாடிக்கட்டும் தொழில், ஆட்டோ மொபைஸ், கனிம வளங்கள், விவசாய பணிகள் நிறைந்து இருந்தும், பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என எந்தவித முன்னேற்றமும் இல்லை. கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும். அதோடு, கரும்பு விளைச்சல் அமோகமாக இருப்பதால், சர்க்கரை ஆலை அமைக்கப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் பல ஆண்டு எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதன்மூலம், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேற்படிப்பு படிப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இதுபோன்ற தொலைநோக்கு திட்டங்கள், 'சங்ககிரி தொகுதி' பொறுத்தவரையில் கானல் நீராகவே இருந்து வருகிறது. வரும் தேர்தலில், இந்த திட்டங்களை செயல்படுத்த வாக்குறுதி கொடுக்கும் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, தி.மு.க.,- அ.தி.மு.க., -தே.மு.தி.க.,- பா.ம.க.,- காங்., என, எந்த கட்சியை சார்ந்தவர்கள் போட்டியிட்டாலும் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த முன்வந்தால் மட்டுமே இனி தேர்தலில் ஜெயிக்க முடியும் என்கிற நிலை சங்ககிரி தொகுதியில் ஏற்பட்டுள்ளது.