/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'எந்த பணியும் நடக்கல; குடியிருக்க முடியல': அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆவேசம்
/
'எந்த பணியும் நடக்கல; குடியிருக்க முடியல': அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆவேசம்
'எந்த பணியும் நடக்கல; குடியிருக்க முடியல': அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆவேசம்
'எந்த பணியும் நடக்கல; குடியிருக்க முடியல': அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆவேசம்
ADDED : டிச 31, 2024 07:43 AM
பள்ளிப்பாளையம்: ''வார்டில் எந்த பணியும் நடக்காததால், மக்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை; வீட்டில் குடியிருக்க முடியவில்லை,'' என, பள்ளிப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில், அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆவேசத்துடன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் மன்ற அரங்கில், நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம்:
சம்பூரணம், அ.தி.மு.க.,: புதிய குடிநீர் திட்டத்தில், தரமற்ற குடிநீர் குழாய் அமைத்துள்ளதால் அடிக்கடி சேதமடைகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. குடிநீர் சரியாக வருவதில்லை. ஒரு வார்டுக்கு குடிநீர், வடிகால், குப்பை அகற்றம் ஆகிய மூன்றும் மிகமிக அத்தியாவசிய தேவை. ஆனால், இந்த மூன்றும் இல்லை. வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை. மக்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. வார்டில் என்னால் குடியிருக்க முடியவில்லை என, ஆவேசமாக பேசினார்.
சுமதி, அ.தி.மு.க.,: நகர்மன்ற கூட்டத்தில் குறைகளை தெரிவித்தால், எதுவும் நடப்பதில்லை. மொபைல் போனில் புகார் தெரிவித்தாலும் எந்த பணியும் நடப்பதில்லை. குடிநீரும் சீராக வருவதில்லை. மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி மாளமுடியவில்லை.
செந்தில், அ.தி.மு.க.,; சத்யா நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர், கழிவுநீர் செல்வதை தடுக்க பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும்.
சசிகுமார், தி.மு.க.,; என் வார்டில், 150 தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் மக்கள் அச்சமடைகின்றனர். நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
வினோத்குமார், தி.மு.க.,: வடிகால் சேதமடைந்துள்ளதால், டூவீலரில் சென்ற, 2 பேர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வராஜ், நகராட்சி தலைவர்: சாலைப்பணி, குடிநீர் பணிகள் விரைவாக முடிக்கப்படும். பண்டிகை காலம் என்பதால் ஆற்றோரத்தில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படும். சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும். தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பணிகள், கூடுதல் பணியாளர்களை அமர்த்தி விரைவில் முடிக்கப்படும்.
பாலமுருகன், துணைத்தலைவர்: பெரியார் நகர் படித்துறையில், இரவில் மது அருந்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, போலீசுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.