ADDED : செப் 16, 2026 05:51 AM
ராசிபுரம்,:ராசிபுரம் பட்டணம் டவுன் பஞ்.,ல், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள்படி, குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பட்டணம் டவுன் பஞ்., செயல் அலுவலர் சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சேரும் கழிவுகளை, ஈரக்கழிவு, உலர் கழிவு, சானிட்டரி கழிவு மற்றும் சிறப்பு கவன கழிவு என, நான்கு வகைகளாக தரம் பிரிக்க வேண்டும். அவ்வாறு தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே, வீடு தேடி வரும் துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வரும் அக்., 1 முதல் பொதுமக்கள் குப்பைகளை, நான்கு வகைகளாக பிரித்து வழங்குவது கட்டாயமாக்கப்படுகிறது. அவ்வாறு முறையாக தரம் பிரித்து வழங்காதவர்களின் வீடுகளில் இருந்து குப்பைகள் எதுவும் சேகரிக்கப்படமாட்டாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
