ADDED : மே 13, 2026 06:37 AM

நாமக்கல் ;சர்வதேச செவிலியர் தினம், ஒவ்வொரு ஆண்டும், மே, 12ல் கொண்டாடப்படுகிறது. நவீன செவிலியர் முறையை உருவாக்கிய, 'புளோரன்ஸ் நைட்டிங்கேலின்' பிறந்தநாளை முன்னிட்டு, சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் சேவையை போற்றும் வகையில் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கலையரங்கில், மருத்துவ கல்லுாரி முதல்வர் முருகலட்சுமி தலைமையில், செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அதில், நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தியதுடன், மெழுகுவர்த்தி ஏந்தியும், கேக் வெட்டியும், உறுதிமொழி ஏற்றும் கொண்டாடினர்.
பின், செவிலியர்கள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மருத்துவமனை கண்காணிப்பாளர் குணசேகரன், உள்தங்கும் மருத்துவ அலுவலர் லீலாதரன் மற்றும் டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
