ADDED : ஜூலை 15, 2026 05:33 AM

நாமக்கல்:'செவிலியர்களுக்கு நிரந்தர பணியிடம் உருவாக்க வேண்டும்' என, வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின், மாவட்ட கிளை சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பால்மணி தலைமை வகித்தார். இதில், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறையை போக்க, கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஆட்சியில் புதிய பணியிட கோப்புகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட, ஆறு அரசு செவிலியர் கல்லுாரிகளுக்கு, நிரந்தர செவிலியர்களை நியமிக்காமல், செவிலியர் போதகர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என, தேர்தல் வாக்குறுதி அளித்த அரசு அதற்கு முற்றிலும் மாறாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தொகுப்பூதிய நியமனங்களை கைவிட்டு, நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
